வணிகம்

உள்பேர வணிகத்தைத் தடுக்க விரைவில் கடுமையான விதிகள்

செய்திப்பிரிவு

பங்கு பரிவர்த்தனை மையத்தில் (செபி) உள்பேர வணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்க கடுமையான விதிமுறைகளை செபி வகுத்து வருவதாக அதன் தலைவர் யு.கே. சின்ஹா தெரிவித்தார்.

முதலீட்டாளர்களைப் பாதிக்கும் கடுமையான குற்றங்கள் மற்றும் தெரியாமல் செய்யும் சிறிய தவறுகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட உள்ளது. தெரியாமல் செய்யும் நியாயமான முதலீட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. அதேசமயம் பங்குச் சந்தைக்குள்ளேயே இருந்து கொண்டு நிறுவனங்களின் வணிக போக்கிற்கு ஏற்ப முதலீடு செய்வது, பங்குகளின் விலையை ஏற்றுவது, குறைப்பது உள்ளிட்ட முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சின்ஹா குறிப்பிட்டார்.

இது தொடர்பாக செபி அமைத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரைகள் இப்போது சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள், முதலீட்டாளர்கள் இம்மாதம் 31-ம் தேதி வரை தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். அதன் பிறகு இது சட்டமாகக் கொண்டு வந்து அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

உள்பேர வணிகத்தில் ஈடுபடுவோரைத் தடுக்க கடந்த 20 ஆண்டுகளாக அமலில் உள்ள விதிமுறைகள் போதுமானதாக இல்லை. அதற்கு மாற்றாக புதிய விதிமுறை அமையும். புதிய விதிமுறை கடுமையானதாக இருந் தாலும், இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. தெரியாமல் தவறு செய்வோர் மீது அவரது தவறின் தன்மைக் கேற்ப நடவடிக்கை இருக்கும். இந்த விதிமுறை தெளிவானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். எது சட்ட விரோதமானது, எவையெல்லாம் தவறான செயல் அல்ல என்ற தெளிவான வழிகாட்டுதல் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகளில் புழக்கத்தில் உள்ள விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டதாக நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள விதிமுறைகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அதிகாரிகளுக்கு அந்நிறுவன பங்கு தொடர்பான சில பிரத்யேக தகவல்கள் கிடைக்கும். இத்தகைய தகவல்கள் பிற சாதாரண முதலீட்டாளர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இவர்கள் உள்பேர வணிகத்தில் ஈடுபடுவது தடுக்கப்படும். இவர்கள் எவரும் இனி வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய விதிமுறைகளின்படி எவரெல்லாம் வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்ற தெளிவான பட்டியல் இடம்பெறும். பத்திரிகை யாளர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாமா? என்பது குறித்தும் இதில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

SCROLL FOR NEXT