வாராக்கடனில் தத்தளிக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆர்பிஐ-யின் உபரித் தொகையிலிருந்து மூலதனம் அளிக்க வேண்டும் என்ற தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனின் ஆலோசனையை ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் நிராகரித்தார்.
இந்த ஆலோசனை வெளிப்படைத்தன்மையை இல்லாது போகச்செய்யும் என்றும் இதனால் முரண்பட்ட இரட்டை நலன் விவகாரம் (conflict of Interest) உருவாகும் என்கிறார் ரகுராம் ராஜன்.
பெங்களூருவில் அசொசேம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரகுராம் ராஜன் கூறியதாவது:
பொருளாதார ஆய்வறிக்கை பொதுத்துறை வங்கிகளுக்கு ஆர்பிஐ மூலதனம் அளிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளது. இது வெளிப்படைத்தன்மையற்ற ஒரு போக்கை உருவாக்கும், அதாவது வங்கிகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனம் வங்கிகள் மீது உரிமை கோரும் விஷயமாகும், இதன் துணையாக முரண்பட்ட இரட்டை நலன் விவகாரமும் உருவாகும், என்றார்.
இதற்குப் பதிலாக அரசுக்கு ஆர்பிஐ டிவிடெண்ட்களை எவ்வளவு வழங்க முடியுமோ அவ்வளவு வழங்கி அரசு அதனை வங்கிகளுக்கு மூலதனமாக வழங்குவதே சரியான நடைமுறை என்று கூறுகிறார்.
மேலும் கடந்த 3 ஆண்டுகளின் உபரித்தொகை அனைத்தையும் ஆர்பிஐ அரசிடம் அளித்து விட்டது என்றார் அவர்.
2013-14-ல் ஆர்பிஐ இவ்வகையில் ரூ.52,769 கோடியை அரசிடம் அளித்துள்ளது, 2014-15-ல் இது ரூ.65,896 கோடியாக அதிகரித்தது, ஆனால் 2010-11-ல் இது ரூ.15,009 கோடியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரகுராம் ராஜன் இது பற்றி மேலும் கூறும்போது, “இப்போது தேவைப்படுவது என்னவெனில் பொதுத்துறை வங்கிகளின் பேலன்ஸ் ஷீட் சரிசெய்யப்படவேண்டும், இந்த நடைமுறை தற்போது நடைபெற்று வருகிறது, இது அதன் தர்க்கபூர்வமான இறுதிநிலைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
வாராக்கடன் பிரச்சினைகளுக்கு ஆர்பிஐ போன்ற கட்டுப்பாட்டு ஒழுங்கு அமைப்புகளை வங்கிகள் சில வேளைகளில் குறை கூறுவதுண்டு, ஆனால் உண்மையென்னவெனில் வங்கியாளர்கள், புரோமோட்டர்கள், மற்றும் சூழ்நிலைகளே வாராக்கடன் ஏற்பட முக்கியக் காரணிகளாகிறது.
வங்கிகளின் வர்த்தக முடிவுகளுக்கு ஆர்பிஐ பதிலீடு செய்ய முடியாது, நுண்நிர்வாகமும் செய்ய முடியாது, வாராக்கடன் உருவாகும் போது அதனை விசாரிக்கவும் முடியாது.
ஆர்பிஐ போன்ற கட்டுப்பாட்டு அமைப்பின் பணி என்னவெனில் செயலில் இல்லாத சொத்துக்கள் பற்றி அவ்வப்போது வங்கிகளை எச்சரிப்பதும் அதனை வெளிப்படுத்துவதுமேயாகும்.
அரசும், ஆர்பிஐ-யும் பொதுத்துறை வங்கிகளின் இந்தக் கடினமான காலக்கட்டத்திலிருந்து அவர்கள் மீற உதவி புரிகிறது. இப்போது இந்நடைமுறை செயல்படத் தொடங்கியுள்ளது. எனவே விரைவில் இந்தப் பொருளாதாரத்தின் பரவலான தேவைகளை வங்கிகள் விரைவில் சந்திக்கும்” என்று கூறினார் ரகுராம் ராஜன்.