வணிகம்

இந்திய நுகர்வோர் நம்பிக்கை சரிவு

செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியா நுகர்வோர் மத்தியாலன நம்பிக்கை சரிவைச் சந்தித்துள்ளதாக நீல்சன் சர்வதேச ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மூன்றாம் காலாண்டில் நுகர்வோர் நம்பிக்கை 112 புள்ளிகளாகச் சரிந்துள்ளது. முந்தைய காலாண்டில் இது 118 புள்ளிகளாக இருந்தது.

இந்தோனேசியா மற்றும் பிலிப்பின்ஸில் நுகர்வோர் நம்பிக்கை முறையே 120 மற்றும் 118 புள்ளிகளாக உள்ளது. இவ்விரு நாடுகளின் நுகர்வோர் நம்பிக்கை முதலிரண்டு இடங்களில் உள்ளன.

நுகர்வோரின் நம்பகத் தன்மை 100 புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது. இதில் சாதக, பாதக அம்சங்கள் கணக்கில் கொள்ளப்பட்டதாக நீல்சன் தெரிவித்தது.

இந்தியாவில் ஆன்லைன் மூலம் கருத்து தெரிவித்த 76 சதவீதம் பேர் இந்தியாவில் பொருளாதாரத் தேக்க நிலை மூன்றாம் காலாண்டில் நிலவும் என்று தெரிவித்துள்ளனர்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பில் ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலை நுகர்வோரின் நம்பிக்கையை வெகுவாகச் சிதைத்துவிட்டது என்று என்று நீல்சன் இந்தியா நிறுவனத்தின் பியுஷ் மாத்துர் தெரிவித்தார். இத்துடன் பணவீக்கம் மற்றும் இந்தியப் பொருளாதாரம் குறித்த பின்னடைவான செய்திகள் நுகர்வோரின் நம்பிக்கையை வெகுவாகச் சிதைத்து விட்டது என்று அவர் மேலும் கூறினார்.

நுகர்வோர் நம்பிக்கை குறைந்துள்ள போதிலும், அவசியத் தேவைகளை ஒட்டி செலவு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு நுகர்வோர் மீதான பொருளாதார நிர்பந்தமே காரணமாகும். மேலும் பண்டிகைக் காலச் செலவும் இதற்கு முக்கியக் காரணமாகும். மேலும் விற்பனையாளர்களும், உற்பத்தியாளர்களும் அளித்த ஏகப்பட்ட சலுகைகளே காரணமா கும். இவையெல்லாம் நுகர்வோரின் செலவிடும் தன்மைக்கேற்ப மாறியுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 6 வரையான காலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 ஆயிரம் பேர் பதில் அளித்தனர்.

SCROLL FOR NEXT