வணிகம்

‘வங்கி தொடங்குவதற்கு தேவையான மூலதனம் இருக்கிறது’

செய்திப்பிரிவு

வங்கி தொடங்குவதற்கான அனுமதியை பந்தன் ஃபைனான் ஸியல் சர்வீசஸ் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி கொடுத்திருக்கிறது. மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்று இந்தியாவில் வங்கியாக மாறுவது இந்த நிறுவனம்தான்.

இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சந்திர சேகர கோஷ் கூறும்போது வங்கி தொடங்க எங்களிடம் போதுமான அளவுக்கு நிதி இருக்கிறது. மூலதன தன்னிறைவு விகிதம் 21 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது.

மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் மூலமாக சமீபத்தில் 260 கோடி ரூபாயை திரட்டினோம். மொத்தமாக 1,100 கோடி ரூபாய் முலதனம் இருக்கிறது. நாங்கள் வசதியான நிலையிலே இருக்கிறோம் என்றார்.

மைக்ரோபைனான்ஸ் நிறு வனங்கள் வங்கியாக மாறும்போது சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களை இணைத்துக் கொள்வார்களே என்று கேட்டதற்கு, நாங்கள் சொந்தமாகவே இயங்க முடியும். நாங்கள் எந்த நிறுவனங்களின் இணைப்பையும் எதிர்பார்க்க வில்லை.

இப்போதைக்கு 13,000 பணியாளர்கள் இருக்கிறார்கள். அடுத்த 18 மாதங்களில் வங்கிக்கு தேவையான பணியாளர்களை எடுக்க இருக்கிறோம்.

ஆரம்ப கட்டத்தில் எத்தனை கிளைகள் திறப்பது, எங்கு திறப்பது என்பது குறித்து எங்கள் குழு ஆராய்ந்து வருகிறது. கூடிய விரைவில் எங்கு கிளைகள் திறப்பது என்பதை முடிவு செய்வோம் என்றார்.

இப்போதைக்கு 2016 கிளைகளில் 70 சதவீதம் கிராமப் புறங்களில் செயல்பட்டுவருகிறது. இதில் சில கிளைகளை மறுசீரமைக்க முடிவு செய்திருக் கிறோம். இப்போதைக்கு மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனத்தில் 55 லட்சம் வாடிக்கை யாளர்கள் இருக்கிறார்கள்.

வங்கி துவங்கும்போது இவர்கள்தான் முதல் வாடிக்கை யாளர்களாக இருப்பார்கள்.

பந்தன் நிறுவனம் 2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 963 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை வழங்கி இருக்கிறது.

உலக வங்கியின் முதலீட்டு பிரிவான த இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் பந்தன் நிறுவனத்தில் 11 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. 2011-ம்ஆண்டு இந்த பங்குகளை வாங்கியது, இதன் மதிப்பு சுமார் 135 கோடி ரூபாய்.

சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு சம்ரிதி என்ற கடன் திட்டத்தையும், கல்விக்காக சுசிக்‌ஷா என்ற கடன் திட்டத்தையும் வைத்திருக்கிறது.

பந்தன் நிறுவனத்துடன் ஐ.டி.எஃப்.சி. நிறுவனத்துக்கும் வங்கி தொடங்குவதற்காக அனுமதியை ரிசர்வ் வங்கி கொடுத்திருக்கிறது. பஜாஜ், ஆதித்யா பிர்லா, அனில் திருபாய் அம்பானி குழுமம் என மொத்தம் 25 நிறுவனங்கள் வங்கி தொடங்க விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT