மிகவும் துல்லியமாக நிலத்தை சமன் செய்வதற்கு புதிய தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள லேசர் லெவலர் கருவி தற்போது விவசாயிகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பயிர் சாகுபடி செய்வதற்கு நிலத்தை சமமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகவும் உள்ளது. வழக்கமாக டிராக்டர் அல்லது வேறு ஏதாவது ஒரு கருவியைக் கொண்டு அந்த ஓட்டுநருக்கு தெரிந்தவரை நிலம் சமன் செய்யப்படும். அதாவது, கண்பார்வையில் உள்ள மேடான பகுதிகள் வெட்டி எடுத்து பள்ளமான பகுதிகளில் நிரப்பப்படும். இது துல்லியமாக இருக்காதென்பதால் இதன் மூலம் ஒரே தடவையில் அந்த நிலத்தைச் சமன் செய்துவிடமுடியாது. அந்த நிலத்தில் பல தடவை தண்ணீர் பாய்ச்சி அதற்கேற்ப நிலம் சமன் செய்யப்படுகிறது.
இதுகுறித்து இக்கருவியைப் பயன்படுத்திய புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு விவசாயி தேவதாஸ் கூறியது: புதியதொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட லேசர் லெவலர் கருவியை புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அதைப் பின்பற்றி எனது நிலத்தை சமன் செய்தேன். கொடுக்கப்பட்ட இரண்டு கருவிகளில் அதாவது ஹைட்ராலிக் மூலம் இயங்கக் கூடிய கலப்பையை டிராக்டரில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
லேசர் கருவியை வயலில் எந்த அளவுக்கு சமன் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு வயலின் ஒரு இடத்தில் வைக்க வேண்டும். அதன்பிறகு டிராக்டரை டிரைவர் மெதுவாக இயக்கினால் போதும், நாம் கலப்பையை ஏற்றவோ இறக்கவோ தேவையில்லை. தானாகவே நிலத்தில் மேடான பகுதியில் வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை பள்ளமான பகுதியில் கொட்டிவிடும்.
இதுகுறித்து உழவியல் பேராசிரியர் மாரிமுத்து கூறியது: இந்தக் கருவி மூலம் சமன் செய்வதனால் நீரை சேமிக்கலாம். களைகள் பெருமளவு கட்டுப் படுத்தப்படுகிறது. பயிர்களுக்கு இடப்படும் ஊட்டச்சத்துக்கள் சீராக அனைத்து செடிகளுக்கும் கிடைக்கிறது. சமச்சீரான பயிர் முதிர்ச்சி மற்றும் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. இந்தக் கருவி அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் வாடகைக்கு கிடைக்கிறது.
விவசாயி தேவதாஸை தொடர்பு கொள்ள: 9786506343.