மத்திய அரசின் தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. செப்டம்பர் 2-ம் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கித் துறையினரும் பங்கேற்க உள்ளதாக அகில இந்திய வங்கிகள் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் சி.ஹெச் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2-ம் தேதி நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக கடந்த மார்ச் 30-ம் தேதி தொழிலாளர் சங்கங்கள் நோட்டீஸ் விடுத்திருந்தன. ஐஎன்டியுசி, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யூஏ, ஏஐசிசிடியு, யுடியுசி, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நோட்டீஸ் அளித்துள்ளன.
ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் செயல்படும் பாரதிய மஸ்தூர் சங் யூனியன் மட்டும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாது. ஆண்டும் செப்டம்பர் 2-ம் தேதிதான் தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.