ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதன் காரணமாக குறுகிய காலத்துக்கு இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கும். சர்வதேச சந்தையில் உள்ள பதற்றம் காரணமாக பாதுகாப்பான முதலீடுகள் என கருதப்படும் டாலர் மற்றும் தங்கம் போன்றவற்றில் முதலீடு அதிகரிக்கும் என்பதால் குறுகிய காலத்துக்கு ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால் நீண்ட கால நோக்கில் இந்திய சந்தையில் வளர்ச்சி இருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கோத்ரெஜ் பிஎன்பி பரிபா நிறுவனத்தின் துணைத் தலைவர் கவுரங் ஷா கூறும்போது, திடீரென ஏற்பட்ட பிரெக்ஸிட் நிகழ்வால் சர்வதேச சந்தைகளில் குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால் இந்தியாவின் அடிப்படை பலமாக இருப்பதால் நீண்ட காலத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. பருவமழை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான சூழ்நிலை மேம்பட்டு வருவதால் உள்நாட்டில் சாதகமான சூழ்நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளன என்றார்.
கோட்டக் நிறுவனத்தின் சந்தை வல்லுநர் ஒருவர் கூறும்போது தற்போதைய சூழ்நிலையில் முதலீடுகள் தங்கம் மற்றும் டாலருக்கு செல்லும். அதனால் டாலர் மதிப்பு மேலும் பலமடையும். இதன் காரணமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு மேலும் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். இதனால் முக்கிய கமாடிட்டிகளின் விலை மேலும் சரியும் என்றார்.
சரிவின் போது முதலீடு
பங்குச் சந்தையில் ஒவ்வொரு முறையும் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை, முதலீடு செய்வதற்கான வாய்ப்பு என்று மோதிலால் ஆஸ்வால் பைனான்ஷியல் சர்வீசஸின் தலைவர் மோதிலால் ஆஸ்வால் தெரிவித்தார். ஒவ்வொரு சரிவின் போதும் முதலீடு செய்யவும், நீண்ட நாள் அடிப்படையில் இந்திய சந்தை பலமாக உள்ளது என்றார்.
இந்தியாவின் வளர்ச்சி என்பது உள்நாட்டு தேவை அடிப்படையிலானது. ஆனால் பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ருஷ்யா, வளைகுடா நாடுகள் உள்ளிட்டவை ஏற்றுமதியை நம்பி இருக்கும் நாடுகள் ஆகும். பிரெக்ஸிட் சிக்கல் சரியாகும் சமயத்தில் மேலும் முதலீடுகள் இந்திய சந்தைக்கு வரும்.
கருப்பு வெள்ளி என்று அழைக்கப்படுகிற ஜூன் 24-ம் தேதி இந்திய சந்தை 4 சதவீதம் அளவுக்கு சரிந்தாலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 600 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்றிருக்கிறார்கள் என்று சந்தை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
இப்போதைக்கு என்னுடைய கவலை இந்தியாவில் பருவமழை எப்படி இருக்கும் என்பதை பற்றியதாக இருக்கிறதே தவிர பிரெக்ஸிட் பற்றி அல்ல என்று ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி சங்கரன் நரேன் தெரிவித்தார். அதே சமயத்தில் குறுகிய காலத்தில் ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்படலாம். இதனால் குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்று சங்கரன் நரேன் தெரிவித்தார்.