வணிகம்

கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலையை விற்க ஐவிஆர்சிஎல் முடிவு

செய்திப்பிரிவு

தனியார் கட்டுமான நிறுவனமான ஐவிஆர்சிஎல், தனது கடன் சுமையைக் குறைக்க சென்னையில் இருக்கும் கடல் நீர் சுத்திகரிக்கும் ஆலையை விற்க முடிவு செய்துள்ளது.

ஜலந்தர்-அமிருதசரஸ் இடை யிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணி மற்றும் சென்னையில் செயல்படும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை ஆகியவற்றை விற்பனை செய்து தங்கள் கடன் சுமையைக் குறைத்துக் கொள்ளப் போவதாக நிறுவனத்தின் தலைவர் இ. சுதிர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை வாங்க மூன்று நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. மேலும் பல நிறுவனங்கள் இந்நிறுவனத்தை வாங்க முன்வரக்கூடும். இதுவரை எந்த நிறுவனமும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் விற்பனை செய்வதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டதாக ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அவர் கூறினார். சென்னையை அடுத்த மீஞ்சூரில் செயல்படும் சுத்திகரிப்பு ஆலையானது நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் கடல் நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இந்த ஆலை 2010-ம் ஆண்டில் ரூ. 600 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது.

சமீபத்தில் ஐவிஆர்சிஎல் நிறுவனம் மூன்று தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தது. தமிழகத்தில் என்எச் 47 தடத்தில் உள்ள பணியை டாடா குழுமத்தின் டிஆர்ஐஎல் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது. ஐவிஆர்சிஎல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ. 6,100 கோடியாகும். கடந்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ. 102 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. கடந்த ஆண்டு நிறுவன வருமானம் ரூ. 3,579 கோடியாகும்.

வட்டி விகிதித்தில் ஸ்திரத்தன்மை நிலவும் வரை புதிதாக எந்த நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளையும் மேற்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

சேலம் சுங்க வழி, குமாரபாளையும் சுங்க வழி, செங்கபள்ளி சுங்க வழி ஆகியவற்றை கட்டுதல் நிர்வகித்தல் திரும்ப ஒப்படைத்தல்(பி.ஒ.டி) என்ற அடிப்படையில் செயல்படுத்தி வந்தது. இம்மூன்று திட்டங்களும் ரூ. 2,200 கோடிக்கு விற்பனை செய்யப்ட்டன.

ஐவிஆர்சிஎல் நிறுவனம் மேலும் சில சாலைத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் சில முடியும் தருவாயில் உள்ளன. 155 கி.மீ தூர இந்தூர்-ஜாபுவா சாலைத் திட்டப் பணி இன்னும் 6 மாதங்களில் முடிவடையும் என்று அவர் கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் பாராமதி-பைதான் இடையிலான திட்டப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக ரெட்டி கூறினார்.

SCROLL FOR NEXT