வணிகம்

கம்ப்யூட்டர் ஏற்றுமதி 8.6 சதவீதம் சரிவு

செய்திப்பிரிவு

தனிநபர் பயன்படுத்தும் பிசி எனப்படும் கம்ப்யூட்டர்களின் ஏற்றுமதி உலகம் முழுவதும் 8.6 சதவீதம் சரிந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் மூன்றாம் காலாண்டில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் ஏற்றுமதி சரிந்துள்ளதாக கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மூன்றாம் காலாண்டில் உலகம் முழுவதும் கம்ப்யூட்டர் ஏற்றுமதி 8.07 கோடியாக இருந்தது.

ஆனால் முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது 8.78 கோடியாக இருந்தது. உலகம் முழுவதும் தொடர்ந்து 6-வது காலாண்டாக கம்ப்யூட்டர், லேப்டாப் ஏற்றுமதி சரிந்துள்ளது.

2008-ம் ஆண்டிடுக்கு பிறகு இந்தக் காலாண்டில் மிக மிக மோசமான அளவுக்கு விற்பனை சரிந்துள்ளதாக கார்ட்னர் நிறுவன அனலிஸ்ட் மிகாகோ கிடாகாவா தெரிவித்தார்.

பிசி-க்களிலிருந்து டேப்லெட் கம்ப்யூட்டருக்கு மாறுவோரது எண்ணிக்கை வெகுவாகக் அதிகரித்துள்ளது. ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படும் கம்ப்யூட்டரை முதல் தலைமுறையினர் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேசமயம் முன்னேறிய சந்தைகளில் துணை கருவிகளை வாங்கும் போக்கு அதிகம் உள்ளது என்று மிகாகோ மேலும் கூறினார்.

கம்ப்யூட்டர் பிராண்ட்களில் லெனோவா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. சீன சந்தையிலேயே இந்நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை சரிந்துள்ளபோதிலும் இந்நிறுவனம் காலாண்டில் 1.41 கோடி பிசி-க்களை ஏற்றுமதி செய்துள்ளது.

முந்தைய காலாண்டில் இந்நிறுவன ஏற்றுமதி 1.37 கோடியாகும்.

SCROLL FOR NEXT