வணிகம்

எச்எம்டி நிறுவனத்துக்கு ரூ. 77 கோடி நிதி உதவி

செய்திப்பிரிவு

நலிவடைந்த நிலையில் உள்ள எச்எம்டி நிறுவனத்துக்கு ரூ. 77 கோடி நிதி உதவி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எச்எம்டி லிமிடெட் மற்றும் ஹெச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் நிதி உதவி வழங்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நலிவடைந்த நிலையில் உள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊதியம், சட்டப்படி வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), பணிக்கொடை (கிராஜுட்டி) ஆகியன வழங்கு வதற்காக இத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

திட்டம் சாரா கடனுதவியாக ரூ.27.06 கோடியை எச்எம்டி லிமிடெட் நிறுவனத்துக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. 2013 மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலத்துக்கு ஊழியர்களுக்கு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டிய அனைத்து சலுகை களையும் அளிக்க இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல எச்எம்டி மெஷின் டூல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 50.34 கோடி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செப்டம்பர் 2012 முதல் மார்ச் 2013 வரையான காலத்தில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம், சட்டப்படி வழங்கவேண்டிய சலுகைகள் அனைத்தையும் வழங்க இத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. 1953-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT