வணிகம்

இந்தியாவின் வளர்ச்சி 4.7 சதவீதமாகக் குறையும்

செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டில் (2013-14) இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.7 சதவீதமாகக் குறையும் என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே சர்வதேச செலாவணி நிதியம் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறையும் என கூறி வந்துள்ள நிலையில் இப்போது உலக வங்கியும் இந்தியாவின் வளர்ச்சி குறையும் என சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை உலக வங்கியின் தெற்காசிய பிரிவுக்கான தலைமை பொருளாதார நிபுணர் மார்டின் ரமா வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-ம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதத்தை எட்டக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.1 சதவீத அளவுக்கு இருக்கும் என ஏற்கெனவே உலக வங்கி கணித் திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரலில் உலக வங்க வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு நிதி ஆண்டில் 6.1 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் 6.7 சதவீ தமாகவும் இருக்கும் என கணித்திருந்தது.

கடந்த வாரம் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட அறிக்கையில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 3.75 சதவீத அளவுக்கு இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு இது 5.1 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என்றும் சுட்டிக் காட்டியிருந்தது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீத அளவுக்குக் குறைந்தது. கடந்த 10 ஆண்டுகளாக 8 சதவீத அளவுக்கு வளர்ச்சியை எட்டியிருந்தது, கடந்த ஆண்டு சரிவைச் சந்தித்தது.

இந்தியாவின் முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீத அளவுக்குத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டதாக உலக வங்கி அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ச்சி யாக ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தகம் இறங்குமுகத்தில் இருந்த தது. கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு, ஜூலை மாதத்தில் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவு ஆகியவை யும் கணக்கில் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தி சரிவு உள்ளிட்ட பல காரணிகள் கணக்கில் கொள்ளப்பட்டாலும், இரண்டாம் காலாண்டில் பணவீக்கம் குறைந்தது, வேளாண் உற்பத்தி அதிகரித்தது, ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மாற்று மதிப்பு ஸ்திரமடைந்தது உள்ளிட்ட பல்வேறு சாதக காரணிகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடும் என்று மார்டின் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு 1.9 சதவீதமாக இருந்த வேளாண் உற்பத்தி 3.4 சதவீதமாக உயரும்பட்சத்தில்தான் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

புதிய முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் தொழில்துறை உற்பத்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஆகியன பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் மார்ட்டின் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பேரியல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அடிப்படை யாகக் கொண்டது. மேலும் பண வீக்கம், நடப்புக் கணக்கு பற்றாக் குறை, அதிகரித்து வரும் ஏற்றுமதி, இறக்குமதி இடையிலான பற்றாக் குறை ஆகியன விரைவான பொருளா தார வளர்ச்சியை பின்னுக்கு இழுக்கும் காரணிகளாகும்.

மேலும் கடந்த சில நாள்களாக பங்குச் சந்தையில் ஏற்றம் காணப் பட்டாலும், எதிர்நோக்கியுள்ள சவால் கள் தொடர்கின்றன. இதனாலேயே பேரியல் பொருளாதார கொள்கை யில் மாற்றம், சீர்திருத்தம் ஆகியன வளர்ச்சிக்குத் தேவைப்படும் வலுவான காரணிகளாகும்.

இப்போது நிலவும் சூழ்நிலை யைக் கருத்தில் கொண்டால், வளர்ச்சிக்கான வாய்ப்புக்கு இதுவே தருணமாகும். அதேபோல சீர்திருத் தங்களை மேற்கொள்ள உரிய நேரமும் இதுவாகும். இவைதான் வளர்ச்சிக்கு வழியேற்படுத்தும் என்று மார்டின் குறிப்பிட்டார்.

மொத்த விலைக்குறியீட்டெண் (டபிள்யூபிஐ) நடப்பு நிதி ஆண்டில் 5.3 சதவீதமாகக் குறையும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. முன்னர் இது 6.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து நடப்பு நிதிஆண்டிலும் இறங்குமுகத்தில் இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் காணப்படும் ஸ்திரமற்ற நிலை இந்தியாவின் பணவீக்க நெருக்குதலுக்கு மற்றொரு காரணம் என்றும் உலக வங்கி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் 5.3 சதவீதமாக நடப்பாண்டிலும் வரும் நிதி ஆண்டில் 5.2 சதவீதமாகவும் குறையும். அதுவும் வேளாண் உற்பத்தி அதிகரித்து பொருள்களின் விலை குறைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை பற்றி சுட்டிக் காட்டியுள்ள உலக வங்கி, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 4.1 சதவீதமாக இருக்கும் என்று சொன்னது, முன்னர் இது 4.5 சதவீதம் என கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது நம்பிக்கையளிக்கும் விஷயமாகும். இதனால் வர்த்தகப் பற்றாக்குறை கணிசமாகக்குறையும் என்றும் உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT