மின் வணிக இணையதளமான ஃபிளிப்கார்ட் அறிவித்த 'பிக் பில்லியன் டே' தள்ளுபடி விற்பனை இணையவாசிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நாளேடுகளில் விளம்பரம் வெளியானதிலிருந்து காலை 8 மணி முதல் ஃபிளிப்கார்ட் இணையதளத்தை பலரும் முற்றுகையிட்டதால் அந்த இணையதளம் முடங்கிப் போனது.
கிடைத்த ஓரிருவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் விரும்பிய பொருள் விற்றுத் தீர்ந்ததாகவும், ஸ்டாக் இல்லை என்ற தகவலுமே ஃபிளிப்கார்ட் இணையத்தில் தோன்றி பெரும் பாலானவர்களை எரிச்சலுக் குள்ளாக்கியது.
ஏமாற்றமடைந்த பல வாடிக்கை யாளர்கள் தங்களது ஆதங்கத்தை, ஏமாற்றத்தை குறும் பதிவுகளாக சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர்.
ஆன்லைன் மூலம் பொருள் களை வாங்கும் போக்கு இந்தி யாவில் இப்போது அதிகரித்து வருகிறது. ஆன்லைன் சந்தையில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் கோலோச்சி வந்தது.
இதற்குப் போட்டியாக இப்போது அமேசான் நிறுவனமும் களமிறங்கியுள்ளது.
கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக ஃபிளிப்கார்ட் இது பற்றி விளம்பரம் செய்து வந்தது. அதன் நிறுவனர்கள் சார்பில் வாடிக்கை யாளர்களுக்கு இ-மெயில் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒரு ரூபாய்க்கும் பொருள்!
‘பிக் பில்லியன் டே' என வருணிக்கப்பட்ட இந்தத் தள்ளுபடி விற்பனை நேற்று (திங்கள்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. 50 சதவீதம் வரை தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம் என ஃபிளிப்கார்ட் கூறியிருந்தது, சில பொருட்களை ஒரு ரூபாய்க்கு வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எதிர்பார்த்ததைப் போலவே இந்த விற்பனை அறிவிப்பு இணையவாசிகள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால், ஆர்வத்துடன் பொருட்களை வாங்க ஃபிளிப்கார்ட் இணையதளத்துக்குச் சென்ற பலருக்கும் ஏமாற்றம் தரும் அனுபவம் ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் எதிரொலிக்கின்றன.
பொருள்கள் தேர்வு செய்தாலும் அதை டெலிவரி செய்யும் வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால் பல வாடிக்கையாளர்களின் கோபம் மேலும் அதிகரித்துள்ளது. தங்களது கோபத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் பொருள்களின் விலையை முதலிலேயே உயர்த்திவிட்டு இப்போது தள்ளுபடி தருவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஃபிளிப்கார்ட்டுக்கு போட்டியாக அமேசான் மற்றும் ஸ்நாப்டீல் தளங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன. இவை எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களை திருப்தி செய்யப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.