வணிகம்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் எண்ணிக்கை சரிவு

செய்திப்பிரிவு

சிறு முதலீட்டாளர்கள் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்டிலிருந்து வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். நடப்பு நிதி ஆண்டின் முதல் 8 மாதத்தில், அதாவது ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 24 லட்சம் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள். லாபத்தை வெளியே எடுத்ததும் முக்கியமான காரணங்களுள் ஒன்று.

செபியின் தகவல்படி 45 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். கடந்த நிதி ஆண்டு முடிவில் 4.28 கோடி சிறுமுதலீட்டாளர்களின் கணக்குகள் இருந்தன. ஆனால் நவம்பர் மாதம் முடிவில் 4.04 கோடி கணக்குகள் மட்டுமே இருக்கின்றன.

இந்த இடைப்பட்ட காலத்தில் 29 லட்சம் ஈக்விட்டி கணக்குகள் குறைந்திருக்கின்றன. கடந்த நிதி ஆண்டின் முடிவில் 3.32 கோடி கணக்குகள் இருந்தன. ஆனால் நவம்பர் மாத முடிவில் 3.02 கோடி கணக்குகள் மட்டும் ஈக்விட்டி பிரிவில் இருந்தன. செபி தொடர்ந்து முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடந்தி வந்தாலும், ஈக்விட்டி கணக்குகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இது குறித்து செபியின் தலைவர் யூ.கே.சின்ஹாவும் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதே சமயம், கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நடப்பு நிதி ஆண்டின் முதல் எட்டு மாதத்தில் 4.84 லட்சம் கணக்குகள் அதிகரித்திருக்கிறது. கடந்த மூன்று வருடத்தில் மட்டும் 15 லட்சம் சிறுமுதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT