ஐரோப்பிய யூனியனின் கட்டுப் பாட்டு அமைப்பான ஐரோப்பிய யூனியன் கமிஷன் கூகுள் நிறுவனத்துக்கு 270 கோடி டாலர் அபராதம் விதித்துள்ளது. நம்பகத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மிக அதிக அளவு அபராதம் விதிக் கப்பட்டுள்ளதால், இந்நிறுவனத் துக்கு எதிராக போடப்பட்டுள்ள மேலும் 2 வழக்குகளின் முடிவுகள் மிகக் கடுமையானதாக இருக்கும் என்று தோன்றுகிறது.
உலக அளவில் மிகவும் முன்னணியில் விளங்கும் இணையதள தேடு பொறியான கூகுள் நிறுவனம் 90 நாள்களுக்குள் தனது ஷாப்பிங் சேவைக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் தவறினால் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் சர்வதேச அளவில் நாளொன்றுக்கு ஈட்டும் சராசரி வருமானத்தில் 5 சதவீத அளவுக்கு அபராதம் விதிக்கப் படும் என்று இயு கமிஷன் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் தொடர்ச்சியாக தங்கள் நிறுவனத்தால் ஒப்பீடு செய்யப்பட்ட ஷாப்பிங் அளவீடு களை அளித்து அவை மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் தேடுபவருக்கு கிடைக்கும் வகை யில் செயல்பட்டுள்ளது. அதே போல போட்டி நிறுவனங்களின் முகவரிகளை கிடைக்காமல் செய் துள்ளது என்று ஐரோப்பிய யூனியன் கமிஷன் கண்டறிந்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் வகுத் துள்ள நம்பகத்தன்மை விதிமீறல் நடவடிக்கைகளை கூகுள் மேற் கொண்டதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு இணை யாக போட்டியிட வாய்ப்பு அளிக்க வில்லை என்றும் கூறப்படுகி றது. ஐரோப்பிய யூனியன் நுகர் வோர்களுக்கு புத்தாக்கத்தின் மூலம் கிடைக்க வேண்டிய பலன் கிடைக்காமல் செய்யப்பட்டுள்ள தாக இயு கமிஷனர் மார்கரெட் வெஸ்டகெர் தெரிவித்தார்.
கடந்த 7 ஆண்டுகளாக மேற் கொள்ளப்பட்ட விசாரணை முடிவு களின் அடிப்படையில் மிக அதிக அளவிலான அபராதத்தை இயு கமிஷன் விதித்துள்ளது. அமெரிக்க இணையதளமான யெல்ப், டிரிப் அட்வைசர், பிரிட்டனின் விலை ஒப்பீடு இணையதளமான பண்டெம், நியூஸ் கார்ப் ஆகியன அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஐரோப்பிய கமிஷன் ஒரு நிறுவனத்துக்கு விதிக்கும் அதிகபட்ச அபராதம் இதுவாகும். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு இன்டெல் நிறுவனத்துக்கு 106 கோடி டாலர் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.