மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் வாசிக்க தொடங்கிய சமயத்தில் ஏற்ற இறக்கமாக இருந்த பங்குச்சந்தை, மொத்த பட்ஜெட் உரையை முடித்த பிறகு ஏற்றம் அடைந்தன. காலையில் வர்த்தகம் சரிவடைந் தாலும் நேற்றைய வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 485 புள்ளிகள் உயர்ந்து 28141 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல நிப்டி 155 புள்ளிகள் உயர்ந்து 8716 புள்ளியில் முடிவடைந்தது.
ஏற்றத்துக்கான காரணம்
சந்தையின் ஏற்றத்துக்கு பல காரணங்கள் உள்ளன. பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது அல்லது நீண்ட காலம் என்பதற்கான விளக்கம் மாற்றி அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் இந்த இரண்டு மாற்றங்களையும் ஜேட்லி அறிவிக்கவில்லை. அதேபோல பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது, நிதிப்பற்றாக்குறையை 3.5 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயம் செய்திருப்பது, கட்டுமானத்துக்கு ரூ.3.96 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பது, ரூ.50 கோடிக்கும் குறைவான வருமானம் இருக்கும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை குறைத்திருப்பது, குறைந்த தொகை வீடுகளுக்கு தொழில் துறை அந்தஸ்து வழங்கி இருப்பது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.
அதேபோல பங்கு பரிவர்த்தனை வரி உள்ளிட்ட இதர வரிகளில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
பொதுத்துறை பங்குகள்
பொதுத்துறை பங்குகளில் மத்திய அரசு முதலீடு செய்ய முடிவு செய்திருப்பதால் எஸ்பிஐ, யுனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை நேற்றைய வர்த்தகத்தில் உயர்ந்து முடிந்தன. ஒருங்கிணைந்த எண்ணெய் நிறுவனம் அமைக்கப்படும் என்னும் பரிந்துரையால் பிபிசில், ஹெச்பிசிஎல் மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன. விவசாயத் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் இருந்தால் விவசாய பங்குகள் உயர்ந்து முடிந்தன.
துறை வாரியாக பார்ர்கும்போது ரியால்டி துறை குறியீடு 4.78 சதவீதம் உயர்ந்து முடிந்தது. அதனை தொடர்ந்து ஆட்டோ, வங்கி எப்எம்சிஜி ஆகிய குறியீடுகள் உயர்ந்து முடிந்தன. அதேபோல மிட்கேப் குறியீடு 2.03 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.68 சதவீதமும் உயர்ந்து முடிந்தது.
இருந்தாலும் ஹெச்1பி விசா பிரச்சினைகள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை சரிந்து முடிந்தன. இன்போசிஸ் பங்கு 1.28 சதவீதம், டிசிஎஸ் 2.78 சதவீதம், விப்ரோ 0.44 சதவீதமும் சரிந்து முடிந்தன.