வணிகம்

டிசம்பர் இறுதியில் பணவீக்க பத்திரங்கள்: இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

செய்திப்பிரிவு

அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக சிறுமுதலீட்டாளர்களின் சேமிப்பு குறைந்துகொண்டே வருகிறது. அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் பணவீக்க பத்திரங்கள் வெளியாகும் என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பணவீக்க பத்திரங்கள் வெளியாகும் என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஹெச்.ஆர்.கான் டெல்லியில் தேசிய வீட்டு வசதி வங்கியின் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியாகும்.

டிசம்பர் மாத இறுதிக்குள் பத்திரங்களை வெளியிடும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த வருடத்தில் ரூ. 10,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரையில் பத்திரங்களை (மொத்த விலை மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் பத்திரங்கள்) வெளியாகும் என்று தெரிகிறது. இருந்தாலும் உறுதியான தகவல்கள் விரைவில் வெளியாகும்.

சிறு முதலீட்டாளர்களுக்கு 10 ஆண்டு கால அடிப்படையில் பணவீக்க பத்திரங்கள் வெளியாகும் என்று கடந்த மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரைஆண்டுக்கு ஒரு முறை வட்டிவிகிதம் கணக்கிடப்படும் என்றும், முதிர்வின் போது மொத்தத் தொகை கிடைக்கும் என்றும் அந்தக் குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

25 பில்லியன் டாலர் திரட்டல்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு கரன்ஸி மூலம் கடன் வாங்குவதற்காக சிறப்பு வழியை ரிசர்வ் வங்கி உருவாக்கியது. இந்த சிறப்பு வழி மூலம் இதுவரை 2,500 கோடி டாலர் தொகை இந்தியாவுக்கு வந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஹெச்.ஆர்.கான் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாத காலத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 30 சதவிகிதம் வரை சரிந்தது. அதனால் டாலர் வரத்தை அதிகரிப்பதற்காக செப்டம்பர் 4-ம் தேதி இந்த சிறப்பு வழியை ரிசர்வ் வங்கி உருவாக்கியது. இந்த சிறப்பு வழி வரும் நவம்பர் 30-ம் தேதி வரை மட்டும்தான் இருக்கும்.

இந்த திட்டத்தின்படி வங்கிகள் டயர் 1 கேபிடலை அதிகரிக்க 100 சதவிகிதம் வரை வெளிநாட்டில் நிதி திரட்டலாம்.

வட்டி உயரும்: பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச்

வரும் டிசம்பர் 18-ம் தேதி நடக்க இருக்கும் ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கை வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் உயர்த்தப்படலாம் என்று அமெரிக்காவின் புரோக்கரேஜ் நிறுவனமான பேங்க் ஆஃப் இந்தியா மெரில் லிஞ்ச் தெரிவித்திருக்கிறது. இப்போது உயர்த்தப்படும் வட்டி விகிதம் இரண்டாம் அரையாண்டில் பணவீக்கத்தை குறைப்பதற்கு உதவும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பருவமழை சரியாக இருக்கும் பட்சத்தில் தற்போது இருக்கும் 7 சதவிகிதம் பணவீக்கம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 5 சதவிகிதமாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் கருத்து சொல்லி இருக்கிறது.

SCROLL FOR NEXT