பட்டியலிடப்பட்ட முக்கிய புளூசிப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் ஊதியம் அதிகரித்து சராசரியாக ரூ.20 கோடியாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊதிய அளவு சராசரியாக ரூ.10 கோடி இருந்தது. இது 2015 நிலவரமாக இருந்தபோதிலும் அதற்கு முந்தைய ஆண்டில் மிகக் குறைவாக இருந்துள்ளது. இந்திய தனியார் நிறுவனங்களில் சம்பளம் அதிகரித்துள்ள போதிலும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களது சம்பளம் ரூ.25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை என்கிற அளவிலேயே இந்த காலகட்டத்தில் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய பெரிய நிறுவனங்கள் 2015-16 ஆம் நிதியாண்டில் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகளது சம்பளம் குறித்து அளித்துள்ள அறிக்கைகள்படி இந்த ஆய்வு வெளிவந்துள்ளது. பங்குச் சந்தை பட்டியலில் உள்ள இந்த நிறுவனங்களில் சராசரியாக ரூ. 19 கோடி ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது.
சம்பளம், கமிஷன், படிகள், இதர சலுகைகளின் மதிப்பு மற்றும் இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பங்குகள் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது. முக்கிய மிகப்பெரிய நிறுவனத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட இதர சலுகைகளையும் அறிக்கையில் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. முக்கியமாக தலைமைச் செயல் அதிகாரிகள் தவிர, முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், நிர்வாக இயக்குநர்களுக்கு இந்த சம்பள உயர்வு உள்ளது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 24 தனியார் நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் அறிக்கைகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நான்கு நிறுவனங்கள் தங்களது அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை ஆறு பொதுத்துறை நிறுவனங்களின் புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ரூ.31.10 லட்சம் ஊதியமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள தனியார் நிறுவனங்களில் எல் அன்ட் டி தலைவர் ஏ.எம் நாயக் ரூ. 66.14 கோடியை ஊதியமாக வாங்குகிறார். மேலும் இதில் பாதி அளவுக்குமேல் சுமார் ரூ. 39 கோடி ரூபாய் அளவுக்கு இதர சலுகையாக பெறுகிறார். இன்போசிஸ் நிறுவனத்தின் விஷால் சிக்கா ரூ. 48.73 கோடியும், லுபின் பார்மா நிறுவனத்தின் தலைவர் தேஷ் பந்து குப்தா ரூ.44.80 கோடியும் ஊதியமாக பெறுகின்றனர்.
பொதுவாக இந்த பட்டியலில் வங்கித்துறை தலைவர்களின் மொத்த சலுகைகள் குறைந்துள்ளது. ஆக்ஸிஸ் வங்கியின் ஷிகா ஷர்மாவின் ஊதியம் ரூ.5.50 கோடியாக உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் சாந்தா கொச்சார் சம்பளம் ரூ.6.60 கோடியாகவும் ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவர் ஆதித்யா பூரியின் சம்பளம் ரூ.9.70 கோடியாக உள்ளது.
ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் தலைவர் தீபக் பரேக் ரூ.1.89 கோடியை சம்பளமாக பெறுகிறார். ஆனால் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கெகி மிஸ்த்ரி ரூ. 9.30 கோடி ரூபாய் வாங்குகிறார். நிர்வாக இயக்குநர் ரேனு சூட் கர்நாட் ரூ. 8.50 கோடி ரூபாய் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சன்பார்மா, மாருதி, ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் சிப்லா நிறுவனங்களின் தலைவர்களது சம்பளம் குறித்த புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை.