ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. இதில் பல சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ சேவையை அறிமுகம் செய்தார் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இதனால் போட்டி நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
வரும் செப்டம்பர் 5-ம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ தனது முழு சேவையை தொடங்கும். டிசம்பர் 31-ம் தேதி வரை அனைத்து சேவைகளும் இலவசமாகும். அதன் பிறகு ஒரு ஜிபி டேட்டா ரூ.50க்கு வழங்கப்படும். தற்போது சந்தையில் ஒரு ஜிபி டேட்டா 250 ரூபாய் என்ற அளவில் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து அழைப்புகள் மற்றும் ரோமிங் கட்டணங்கள் இலவசமாகும். ரூ.149 முதல் ரூ.4,999 வரை மாத கட்டணங்களுக்கான 7 திட்டங்கள் இருக்கின்றன. அனைத்து திட்டங்களிலும் அழைப்புகள் இலவசம். ரிலையன்ஸ் ஜியோ செயலி (ரூ.15,000 மதிப்புள்ளது) வரும் டிசம்பர் 31, 2017 வரை இலவசமாகும். இதில் 300 தொலைக்காட்சி சேனல்கள், 6,000 படங்கள் பார்ப்பது என பல வசதிகள் உள்ளன.
தற்போது சந்தையில் இருக்கும் நிறுவனங்களின் 70 சதவீத வருமானம் அழைப்புகள் மூலமே வருகிறது. அதனை ஜியோ இலவசமாக கொடுக்கிறது.
ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசியதாவது:
தற்போது சந்தையில் இருக்கும் நிறுவனங்களுக்கு பல சாதகங்கள் உள்ளன. அந்த நிறுவனங்கள் ஏற்கெனவே நீண்ட காலமாக சந்தையில் செயல்பட்டு வருகின்றன. நெட்வொர்க், வாடிக்கை யாளர்கள் என பல சாதகங்களை தவறாக பயன்படுத்த கூடாது. அதேபோல வேறு நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருப்பவர்கள் ஜியோவுக்கு மாற விரும்பினால் அந்த நிறுவனங்கள் தடுக்க கூடாது. மாறுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
இப்போதைக்கு 18,000 நகரங்கள், 2 லட்சம் கிராமங்கள் இணைப்பில் உள்ளன. 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 90 சதவீத அளவுக்கு இணைப்பு நடைபெற்றிருக்கும். இனி அனைத்து விதமான சிக்கலான கட்டண முறைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு 25 சதவீதம் கூடுதல் டேட்டா வழங்குவது என பல திட்டங்கள் உள்ளன.
ஜப்பானில் ஒரு ஜிபி டேட்டா 30 டாலர், கொரியாவில் ஒரு ஜிபி டேட்டா 18 டாலர், சீனாவில் ஒரு ஜிபி டேட்டா 15 டாலர், ஸ்பெயினில் ஒரு ஜிபி டேட்டா 7.5 டாலருக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு ஜிபி 3.5 டாலருக்கு தற்போது வழங்கப்படுகிறது. ஜியோ வருகைக்கு பிறகு 1 டாலராக குறையும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
சந்தை மதிப்பு சரிவு
ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி 90 நிமிடங்கள் பேசினார். அவர் பேசிய நேரத்தில் மற்ற டெலிகாம் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக சரிந்தது. பார்தி ஏர்டெல் பங்கு 6.2 சதவீதம், ஐடியா செல்லுலார் 10.49 சதவீதம் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு 8.99 சதவீதமும் சரிந்தன.
ஸ்டார்ட் அப் நிதி ரூ.5,000 கோடி
ஸ்டார்ட் அப் நிறுவனங் களுக்காக ரூ.5,000 கோடி வென்ச்சர் கேபிடல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். இளம் தொழில்முனைவோர்களுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த நிதி முதலீடு செய்யப்படும்.