கண்ணாடி உற்பத்தி நிறுவனமான செயின்ட் கோபைன் நிறுவனம் `சம்பளம் பெற்றுக் கொண்டே கல்வி கற்பது’ என்ற திட்டத்தின் கீழ் 54 மாணவர்களுக்கு தொழிற்கல்வியை இலவசமாக வழங்கியுள்ளது. இதற்கான பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
10-ம், 12-ம் வகுப்பிற்கு பிறகு மேல் படிப்பை தொடர முடியாத மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உற்பத்தித் துறை சார்ந்த டிப்ளமோ படிப்பை செயின்ட் கோபைன் நிறுவனம் வழங்கியுள்ளது. செயின்ட்கோபைன் நிறுவனமும் என்டிடிஎப் என்ற தொழிற் கல்வி நிறுவனமும் இணைந்து இந்த டிப்ளமோ பயிற்சியை அளித்து வருகிறது. நிறுவனங்களில் வேலைப் பார்த்துக் கொண்டே உற்பத்தி சார்ந்த அனைத்து பாடங்களும் இங்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இதுகுறித்து செயின்ட் கோபைன் நிறுவனத்தின் பிளாட் கிளாஸ் பிரிவின் தெற்கு ஆசிய தலைவர் சந்தானம் கூறுகையில், ``ஒவ்வொரு மாணவருக்கும் கம்ப்யூட்டர், ஆட்டோமோட்டிவ், மெக்கானிக்கல் என அனைத்துப் பிரிவுகளிலும் பயிற்சி அளித்து வருகிறோம். நான்கு ஆண்டுகளுக்கு இந்த பயிற்சியை அளித்து வருகிறோம். பயிற்சியின் போதே சம்பளமும் வழங்கப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் படிப்பதற்கு எளிதாக இருக்கிறது.
பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் வேலை வாய்ப்பை அளித்து வருகிறோம். அடுத்தக் கட்டமாக மேல் படிப்பை தொடர முடியாமல் போன 40 பெண்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க இருக்கிறோம். 2020-ம் ஆண்டிற்குள் 400 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.