வணிகம்

பணமதிப்பு நீக்கம் காரணமாக எதிர்காலத்தில் கறுப்பு பண புழக்கம் சிறிதளவு குறையும்: அசோசேம் அறிக்கையில் தகவல்

பிடிஐ

பண மதிப்பு நீக்கம் காரணமாக தற்போது ரொக்கமாக இருக்கும் கறுப்பு பணம் இல்லாமல் போகும். ஆனால் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை பொருளா தாரத்தில் இருந்து நீக்க முடியாது. மேலும் பண மதிப்பு நீக்கம் காரணமாக எதிர்காலத்தில் கறுப்பு பண புழக்கத்தை சிறிதளவு குறைக்க முடியும் என அசோசேம் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறியிருப்ப தாவது: பண மதிப்பு நீக்கம் எதிர்காலத்தில் ஓரளவுக்கு கறுப்பு பணத்தை ஒழிக்கும். ஆனால் மேலும் சில சீர்திருத்தங்களை செய்யும் பட்சத்தில் கறுப்பு பணத்தை பொருளாதாரத்தில் இருந்து நீக்க முடியும். சொத்து பத்திர பதிவுக் கட்டணத்தை குறைக்க வேண்டும். அதேபோல அனைத்து சொத்து பதிவுகளையும் மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் கறுப்பு பண புழக்கத்தை குறைக்கலாம். அதேபோல சந்தை மதிப்புக்கும் விற்பனை விலைக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை குறைக்க வேண்டும்.

சவாலான பணி

பல வங்கி கணக்குகளில் செய்யப்பட்டிருக்கும் அந்நிய செலாவணி மோசடிகளை வரித்துறையால் சரியாக கண்டுபிடிக்க முடிய வில்லை. தற்போது இருக்கும் அமைப்புகளில் வரித்துறையினர் அந்நிய செலாவணி மோசடிகளை கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

மேலும் சந்தையில் இருக்கும் கறுப்பு மற்றும் வெள்ளை பணத்தை சரியாக கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. வெள்ளை பணத்தை கொண்டு ஒருவர் ஒரு பொருள் வாங்கினாலும் கடைக்காரர் அதற்கு விற்பனை வரி செலுத்தவில்லை எனில் அது கறுப்பு பணமாக மாறிவிடுகிறது.

மேலும் கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அதிகாரிகளுக்கு இருக்கும் அதிகாரத்தை குறைக்க வேண்டும். ஆனால் நம்முடைய பெரும்பாலான சட்டங்கள் அதிகாரிகளின் வசதிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பலமான அரசியல் பலம் இருக்கும் அரசாங்கம் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அசோசேம் பரிந்துரை செய்திருக்கிறது.

SCROLL FOR NEXT