ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தை சுப நாளுக்காக ஒத்தி வைக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று தொலைத் தொடர்பு துறை செயலர் கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை அடுத்த கட்ட ஏலத்தை விரைவாக முடிக்க மத்திய அரசு திட்டமிட்டு வந்தது. இந்த ஏலத்துக்காக திட்டமிட்டிருந்த நாளின், அடுத்த சில நாட்களில் இந்து மத நம்பிக்கைபடி நல்ல நாள் இருப்பதால் ஏலத்தை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளது. அந்த நாளில் தொடங்கினால் வருமான இலக்கை எட்ட முடியும் என்கிற நம்பிக்கை காரணமாக தொலைத் தொடர்பு துறையினர் ஏலத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்று மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அடுத்தகட்ட ஸ்பெக்ட்ரம் ஏலம் செப்டம்பர் 29 ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அக்டோபர் 1-ம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. அன்று ஏலம் விட நல்ல நாள் என்று பல நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இதனால் இந்த நிறுவனங்களுக்கு வசதியாக ஏல நாளை மாற்றுவதன் மூலம் அவர்கள் ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு அதிக தொகையை ஒதுக்குவார்கள். எனவே ஏல நாளை அக்டோபர் முதல் வாரத்துக்கு மாற்ற தயாராக இருப்பதாக தொலைத் தொடர்புத்துறை செயலர் ஜே.எஸ்.தீபக் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
சில மொபைல் ரேடியோ அலை வரிசைக்கான முன்பதிவு தொகை மிக அதிகமாக உள்ளன. இதனால் எதிர்வரும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்துக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் போதிய ஆர்வம் இல்லை. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தில் இது மிகப் பெரிய அளவிலான ஏலம் என்பது குறிப்பிடத்தக்கது. தொலை தொடர்பு துறை மிக அதிக அளவி லான முதலீடுகளை கொண்ட துறை யாக உள்ளது. நிறுவனங்கள் அதிக அளவில் தங்களது தொலை தொடர்பு திறன் மற்றும் இணைப்பு களுக்கான விரிவாக்க நடவடிக்கை களுக்கு முதலீடுகளை மேற்கொள் கின்றன. அதேபோல ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கும் மிக அதிக அளவில் முதலீடுகளை செய்கின்றன.
ஸ்பெக்ட்ரம் விலை தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் கருத்து தெரிவித்த ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் தலைமைச் நிதி அதிகாரி அக்ஷயா முந்த்ரா, அலைவரிசை ஏலத்துக்கான விலை காரணமாக அலைவரிசை தேக்கமான ஒரு காலகட்டத்துக்குள் நிறுவனங்கள் செல்கின்றன. சில நிறுவனங்கள் அலைவரிசை பற்றாக்குறை நிலைக்குச் செல்கின்றன என்று குறிப்பிட்டிருந்தார்.
எனினும் ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான இந்த கருத்துகளை தீபக் மறுதலித்தார். நாங்கள் மிகப் பெரிய அளவில் மிகச் சிறந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை விற்பனை செய்கிறோம். அதனால் விலை அதிகமாக இருக்கிறது என்றும் தீபக் கூறினார். மேலும் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் ஏலத்துக்கு முன்பான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டன என்றும் கூறினார்.
தொலைத் தொடர்புதுறை திட்டமிட்டபடி ஸ்பெக்ட்ரம் ஏலம் வெற்றிகரமாக நடக்கும் என்றும், ஏலத்தின் மூலம் திரட்ட திட்டமிட்ட வருமான இலக்கை அடைவோம் என்றும் தீபக் கூறினார்.
தற்போது 2354.55 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படை விலை ரூ.5.56 லட்சம் கோடியாகும். இதில் ரூ.27,000 கோடி மதிப்பில் ஒத்திசைவான ஸ்பெக்ட்ரம் அலைவரிசையும் அடங்கும்.
மிகப் பெரிய அளவில் தற்போதுதான் அலைவரிசை ஏலம் விடப்படுகிறது. இந்த அலைவரிசை மூலம் தொலைத் தொடர்பு சேவை மேம்படுவதுடன், தொலைத் தொடர்பு சேவை இடை இடையே பாதிக்கும் பிரச்சினைகளும் இருக்காது.
ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் ஏலத்துக்கு முன்னதாகவே 25 சதவீத தொகையை செலுத்த வேண்டும். 1 ஜிகாஹெட்ர்ஸ் பாண்டுக்கும் அதிகமாக விண்ணப்பம் செய்பவர்கள் 50 சதவீத தொகையை முன்னதாக செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் நடந்த ஏலத்தை போலவே மீதித் தொகையை நிறுவனங்கள் செலுத்த வேண்டும். குறிப்பாக முதல் தவணையை செலுத்திய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது தவணையை செலுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்புதுறை கூறியுள்ளது.