குறைந்த கட்டணத்திலான விமான சேவையை தொடங்க ஏர் ஏசியா நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தடையில்லாச் சான்றிதழ் (என்.ஓ.சி) அளித்துள்ளது. இதையடுத்து விமான சேவைக்கான அனுமதியை ஏர் ஏசியா பெற வேண்டும். அதன்பிறகு விமான சேவையை தொடங்கலாம்.
டாடா சன்ஸ் நிறுவனமும் அருண் பாட்டியாவின் டெலிஸ்ட்ரா டிரேட்பிளேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து கூட்டாக ஏர் ஏசியா விமான சேவையைத் தொடங்க இந்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணப்பித்திருந்தன. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் இந்தத் திட்டத்துக்கு முதல் கட்ட அனுமதி அளித்திருந்தது.
தங்கள் நிறுவனத்துக்கு மிக விரைவாக தடையில்லா சான்று கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மித்து சாண்டில்யா தெரிவித்துள்ளார். விமான சேவையைத் தொடங்குவதற்கான லைசென்ஸை விரைவில் பெறுவோம் என்று அவர் கூறினார். மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியாவில் குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்படுவதைப் போல இந்தியாவிலும் தாங்கள் வெற்றிகரமாகச் செயல்பட முடியும் என்று நம்புவதாக மித்து சாண்டில்யா தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்திடம் தற்போது 3 ஏர்பஸ் ஏ320 ரக விமானம் உள்ளது. இந்நிறுவனத்தில் 200 பணியாளர்கள் உள்ளனர் என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு 49 சதவீதப் பங்குகளும், டாடா சன்ஸுக்கு 30 சதவீதப் பங்குகளும், டெல்ஸ்டிரா டிரேட்பிளேஸ் நிறுவனத்துக்கு 21 சதவீதப் பங்குகளும் இருக்கிறது.
பாதுகாப்பு தொடர்பான அனுமதியை கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்தது. இப்போது ஏர் ஏசியா நிறுவனம் தாய்லாந்து, மலேசியாவில் விமான சேவையை நடத்திவருகிறது. இந்த விமானங்கள் இந்தியாவில் சென்னை, பெங்களூர், திருச்சி, கொச்சி, கொல்கத்தாவை இணைக்கும் வகையில் விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.