வணிகம்

ட்ரம்ப் விளைவு: அடுத்த நிதியாண்டின் ஐடி துறை வளர்ச்சி கணிப்பு தள்ளிப்போகும்

செய்திப்பிரிவு

ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவிலும் அடுத்த நிதி ஆண் டின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்பினை இந்திய ஐடி நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் வெளி யிடும். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகளால் ஐடி துறை வளர்ச்சி கணிப்பு மே மாதத்துக்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகர் கூறியதாவது: ஐடி துறையின் வளர்ச்சி கணிப்பு அடுத்த காலாண்டுக்கு தள்ளிப்போகிறது. மே மாதத்தில் இந்த கணிப்பு வெளியாகலாம். வாடிக்கையாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களிடம் இது குறித்து கலந்து ஆலோசித்து வருகிறோம். அடுத்த காலாண்டில் கணிக்கும் போதுதான் துல்லியமான கணிப்பை வெளியிட முடியும் என்றார்.

முன்னதாக நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 10 முதல் 12 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டது. அதன் பிறகு 8 முதல் 10 சதவீத வளர்ச்சி இருக்கும் என திருத்தி அமைக்கப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீத வளர்ச்சி இருக்கும் சந்திரசேகர் கூறினார். அதே சமயம் சில சாதகங்களும் இந்த ஆண்டு இருக்கிறது. சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத்துக்காக செய்யும் செலவு இரு மடங்காக உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

தொழில் முனைவோருக்கு முகேஷ் அம்பானியின் ஆலோசனைகள்

இந்திய ஐடி நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டார். இதில் தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ஐந்து ஆலோசனைகளை வழங்கினார்.

ஒரு தொழில்முனைவோர் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் என்ன தீர்வை கண்டுபிடித்தீர்கள் என்பதை விட என்ன பிரச்சினைக்கு தீர்வை கண்டுபிடித்தீர்கள் என்பது முக்கியம்.

லாபம் உள்ளிட்ட விஷயங்களில் ஆரம்ப காலங்களில் நீங்கள் கவனம் செலுத்தினால் மிகப்பெரிய பிரச்சினைக்கான தீர்வினை கண்டு பிடிக்க முடியாமல் போகும். தொழில் முனைவோர்கள் தோல்வி குறித்து கவலைப்பட கூடாது. அதேபோல முதலீட்டாளர் பணத்தை உங்கள் பணத்தை விட கவனமாக செலவு செய்யவேண்டும்.

ஒரு தொழில்முனைவோருக்கு இருக்கும் எண்ணத்தை, ஆர்வத்தை அவரது பணியாளர்களுக்கும் உருவாக்க வேண்டும். எப்போதும் நேர்மறை எண்ணத்தில் இருக்க வேண்டும் என முகேஷ் அம்பானி கூறினார்.

SCROLL FOR NEXT