வணிகம்

வியாபாரத் திட்டம் என்றால் என்ன?

செய்திப்பிரிவு

வியாபாரத் திட்ட அறிக்கையில் நான்கு பகுதிகள் இருக்கவேண்டும் - திட்டச் சுருக்கம், சந்தை ஆய்வு, நிதித் திட்டம், மேலாண்மைத் திட்டம். இது ஒரு வழிகாட்டு முறை தான், உண்மையில் திட்ட அறிக்கையை வேறு கலவையில் கூட கொடுக்கலாம். திட்ட அறிக்கையின் உள்ளடக்கம்தான் அதன் வடிவத்தை நிர்ணயிக்கவேண்டும்.

திட்டச் சுருக்கத்தை மிகுந்த கவனத்துடனும், அதிக திறமையுடனும் எழுதவேண்டும். இந்த பகுதிதான் உங்களுக்கு பணம் கொடுக்கக் கூடிய முதலீட்டாளரோ அல்லது வங்கி மேலாளரோ படிப்பார். திட்ட சுருக்கத்தில் நிறுவனத்தை பற்றியும் அதன் முக்கிய வியாபாரம் பற்றிய அறிமுகமும் இருக்கவேண்டும்.

அந்நிறுவனம் இருக்கும் சந்தையின் போக்கு, நிறுவனம் கூடுதலாக தேடும் முதலீட்டின் அடிப்படை வியாபார காரணங்கள் தெளிவாக இருக்கவேண்டும். இதில் உங்கள் வியாபாரம் பற்றிய முழுமையான விபரங்களும், முக்கிய தகவல்களும் இல்லை என்றாலோ, அல்லது அவர் முடிவெடுக்க தூண்டும் விபரங்கள் இல்லை என்றால், திட்ட அறிக்கையை மேற்கொண்டு படிக்க மாட்டார்கள்.

சந்தை ஆய்வு பகுதியில் நிறுவனம் வருங்காலத்தில் எவ்வாறு சந்தையிடல், விற்பனை திட்டங்களை செயல்படுத்தும் என்று தெரியவரும். பொருளைப் பற்றிய குறிப்புகள், அதனை நுகரப்போகும் வாடிக்கையாளர்கள், அப்பொருளை பற்றிய விளம்பர யுக்தி ஆகியவையும் இப்பகுதியில் தெரியும். இதில், அந்நிறுவனம் எதிர்க்கொள்ளபோகும் போட்டி, அந்நிறுவனத்தின் சாதக, பாதக நிலைகள் பற்றிய குறிப்புகளும் இருக்கும். நிறுவனத்தின் சாதக நிலையை பயன்படுத்தி எவ்வாறு பிரச்சனைகள் எதிர்கொள்ளப்படும் என்பதும் தெரியவரும்.

நிதித் திட்டத்தில், நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலை என்ன, புதிய வியாபாரத்திற்கு எவ்வித நிதி (கடன் அல்லது பங்கு முதலீடு) தேவைப்படும் என்பது இருக்கும். தேவைப்படும் நிதி அளவு, எதிர்கால பணப் புழக்கம் பற்றிய ஆய்வு தகவல்களும் வேண்டும்.

மேலாண்மை திட்டத்தில், நிறுவன மேலாண்மை அமைப்பின் திறன், அனுபவம், இதுவரை செய்த சாதனைகள் எல்லாம் சொல்லப்படவேண்டும். ஒரு புதிய நிறுவனத்திற்கு கடன் கொடுப்பவருக்கு அல்லது பங்கு முதலீடு செய்பவருக்கு தங்கள் பணம், ஒரு சிறந்த மேலாண்மையுடன் கூடிய புதிய வியாபார நிறுவனத்தின் முதலீட்டிற்குப் பயன்படும் என்ற நம்பிக்கையை வரவழைக்கவேண்டும்.

ஒரு வியாபாரத் திட்ட அறிக்கையை படிக்கும் போது அது முழுமையான ஆராய்ச்சி மற்றும் தெளிவான வியாபார சிந்தனையின் அடிப்படையில் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவேண்டும்.

SCROLL FOR NEXT