வணிகம்

நெல் நடவுத் திருவிழா

செய்திப்பிரிவு

பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கும் நமது பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கவும், அந்த நெல் விதைகளை விவசாயிகள் மத்தியில் பரவலாக்கவும் கிரியேட், தணல் போன்ற தன்னார்வ அமைப்புகள் ஏராளமான களப் பணிகளை செய்து வருகின்றன. குறிப்பாக இந்த அமைப்புகளால் தொடங்கப்பட்டுள்ள பாரம்பரிய நெல் விதை வங்கி மிகவும் சிறப்புக்குரியது. 60 நாட்கள் முதல் 180 நாட்கள் உடைய அரிய பாரம்பரிய 150-க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இந்த அமைப்புகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் திருத்துறைப் பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் கிரியேட் அமைப்பு விதைத் திருவிழாக்கள் நடத்தி, இந்த விதை ரகங்களை ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கையாகவே வறட்சி, வெள்ளம் போன்றவற்றை தாங்கி வளரக் கூடியதாகவும், பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல்களை எதிர்க்கும் திறன்களை உடையதாகவும் உள்ளன.

குறைவான உரத் தேவை போன்ற பல்வேறு நல்ல குணங்கள் பாரம்பரிய நெல் ரகங்களுக்கு உண்டு. இவை இயற்கை விவசாயத்துக்கு மிகவும் ஏற்றதாக உள்ளன. பாரம்பரிய நெல் ரகங்களில் மருத்துவ குணங்கள் மிகுந்துள்ளதால் மக்களிடத்தில் இந்த நெல் ரகங்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளன.

ஆகவே நமது பாரம்பரிய நெல் ரகங்களை சராசரி விவசாயிகளிடையே கொண்டு சேர்த்திடவும், அந்தந்த பகுதிக்கு ஏற்ற சிறந்த நெல் ரகங்களை அந்தந்த பகுதி விவசாயிகளே தேர்ந்தெடுத்துகொள்ள வசதி யாகவும் கும்பகோணம் சோழ மண்டல இயற்கை விவசாயிகளின் உற்பத்தியாளர் குழுமம். மற்றும் மருதம் அங்கக வேளாண்மைக் குழு இணைந்து `பாரம்பரிய நெல் நடவுத் திருவிழா’ நடத்தி வருகிறது.

இந்த நடவுத் திருவிழா மூலம் ஒரே பண்ணையில் பல பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்யவும், நடவு முதல் அறுவடை வரை அந்தப் பயிரின் வளர்ச்சியை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் நேரில் கண்டறியவும், அதன் மூலம் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி பற்றி நேரிடையாக விவசாயிகள் கற்றறியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு 94428 71049 மற்றும் 94427 24537 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். ​

SCROLL FOR NEXT