வணிகம்

தையல் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்: திருப்பூரில் ரூ.40 கோடி வர்த்தகம் பாதிப்பு

இரா.கார்த்திகேயன்

புதிய கூலி உயர்வு ஒப்பந்தப்படி, கூலி உயர்வு வழங்காததால், திருப்பூரில் உள்ள 3000க்கும் மேற்பட்ட தையல் நிலையங்களில், வெள்ளிக்கிழமை தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்றும் தொடர்ந்தது. இதனால் இரண்டு நாட்களில் 40 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். உள்நாட்டிற்கு தேவையான உள்ளாடை உற்பத்தி முழுவதுமே இவர்களை நம்பித்தான் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்நாட்டு பனியன் நிறுவனங்களுக்கும், பவர்டேபிள் நிறுவனங்களுக்கும் இடையே கூலி உயர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்.

அதன்படி ஆகஸ்ட் மாதம் புதிய கூலிஉயர்வு ஒப்பந்தம் முடிவானது. செப்டம்பர் 16 -ம் தேதிமுதல் அமலுக்கு வரப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் அமலாக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டும் புதிய கூலி உயர்த்தப்படவில்லை. தற்போது வரை பழைய கூலியே வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தையல் நிறுவனங்கள் தற்போது காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளன.

இதுகுறித்து தையல் நிலைய உரிமையாளர் சங்க செயலாளர் பி.ஆர். கிருஷ்ணமூர்த்தி, “ இந்த புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனுகொடுத்துள்ளோம். அரசு தரப்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமலாகும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

திருப்பூர், கோவை, ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் போன்ற வெளிமாநிலங்களுக்குச் செல்லவேண்டிய பண்டிகை கால உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அட்டைப்பெட்டி, தையல்நூல் உள்ளிட்ட தையல் சம்பந்தப்பட்ட உபதொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு தற்போது 20 கோடி நஷ்டத்தை சுமக்கும் இப்பிரச்னையில் அரசு உடனடியாக தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT