நாகை துறைமுகத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த கோழி மீன்கள்.

 
வணிகம்

நாகை மீனவர்கள் வலையில் சிக்கிய 20 டன் கோழி மீன்கள்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மீனவர்களின் வலையில் ஒரே நாளில் 20 டன் கோழி மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக ஆழ்கடல் சென்றிருந்த நாகை மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் கரை திரும்பி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று காலை நாகை மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த மீனவர்களின் வலையில் அதிகளவில் கோழி மீன்கள் இருந்தன. இந்த வகை மீன்களை கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து மீன் வியாபாரி கருணாகரன் கூறும்போது, ‘‘ஒரே நாளில் சுமார் 20 டன் கோழி மீன்கள் வரத்து இருந்தன. வழக்கமாக ஒரு டன் ரூ.3 லட்சத்துக்கு விற்கப்படும் இவ்வகை மீன்கள், தற்போது ரூ.2.10 லட்சத்துக்கு விற்பனையாகின்றன’’ என்றார்.

பெயர் காரணம்

இந்த மீனின் சுவை கோழி இறைச்சி போன்று இருப்பதால் இவ்வகை மீன்கள் கோழி மீன்கள் அல்லது கடல் கோழி என்று அழைக்கப்படுகின்றன. டெட்ராடாக்ஸின் என்ற கொடிய விஷம் இவ்வகை மீன்களில் உள்ளதால், அதை அகற்றி விட்டு சமைக்க வேண்டும். இதனால் இவ்வகை மீன்களை பெரும்பாலும் தமிழக மக்கள் சாப்பிடுவது இல்லை. இதன் காரணமாக அவை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகின்றன.

360 டிகிரியில் சுற்றி பார்க்கும்

டெட்ராடன் என்ற அறிவியல் பெயர் கொண்ட கோழி மீன்கள், கடல் கோழி அல்லது பேத்தை மீன் என்றும், லெதர் ஜாக்கெட் மீன் என்றும் அழைக்கப்படுகின்றன. இதில் 121 வகை இருப்பதாக அறியப்படுகிறது.

ஆபத்துக் காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்பிக்க, காற்றை உறிஞ்சி தனது உடலை பந்து போல மாற்றும் திறன் கொண்ட கோழி மீன்கள் 360 டிகிரியில் சுற்றிப் பார்க்கும் கண்களை கொண்டது. இந்த மீன்கள் பச்சோந்தி போல தனது இருப்பிடத்துக்கு ஏற்ப உடலை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தது என்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT