இந்தியாவின் நான்காம் காலாண்டு வளர்ச்சி 7.9 சதவீதமாக இருக்கிறது. மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.2 சதவீதமாக உள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
சுரங்கத்துறை 7.4 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது. முன்னதாக 6.9 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தி துறை 9.5 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது.
இரு வருடங்களாக தொடர்ந்து வறட்சி நீடிக்கும் நிலையில், இப்போது பருவமழை நன்றாக இருக்கும் என்ற கணிப்பு வெளியாக இருப்பதால் விவசாய துறை வளர்ச்சி வரும் காலத்தில் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நமது அண்டை நாடான சீனாவின் மார்ச் காலாண்டு வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு சீனா மந்த நிலையில் உள்ளது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் (2015-16) இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருக்கிறது. கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதமாக இருந்தது. முன்னதாக இந்தியாவின் திறனுக்கு ஏற்ற வளர்ச்சியை நாம் அடையவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
ஜூன் 7 மற்றும் 8 தேதிகளில் நரேந்திர மோடி அமெரிக்காவில் முதலீட்டாளர்களை சந்திக்க இருக்கிறார். ஜிடிபி உயர்ந்திருக்கும் இந்த சூழ்நிலையில் அவரது அமெரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி முதல் ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 1.5 சதவீதம் அளவுக்கு குறைத்தது. ஜிடிபி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
நிதிப்பற்றாக்குறை
கடந்த ஏப்ரலில் நிதிப்பற்றாக் குறை 1.37 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. நிதிப்பற்றாக்குறைக்கு நிர்ணயம் செய்த இலக்கில் இது 25.7 சதவீதமாகும். ஒட்டு மொத்த நிதிஆண்டுக்கு 5.33 லட்ச ரூபாய் நிதிப் பற்றாக்குறையாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த வருடம் ஏப்ரலில் நிதிப்பற்றாக்குறை 23 சதவீதமாக இருந்தது.