நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
டெல்லியில் இந்தியத் தொழிலக கூட்டமைப்பு புதன்கிழமை (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த உலக பொருளாதார பேரவை மாநாட்டில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
நஷ்டத்தில் இயங்கும் சில பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் சென்றால் அது சிறப்பாக செயல்படும் என கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய நிறுவனங்களை தனியாருக்கு அளிக்க அரசு தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.
சில பொதுத்துறை நிறுவனங் கள் கட்டாயம் மூட வேண்டிய சூழலில் உள்ளன. இதனால் அதில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையிழப்பார்கள். இதே நிலையில் அவர்கள் தொடர அனுமதிப்பதா அல்லது அத்தகைய நிறு வனங்களை தனியாரிடம் அளிப் பதன் மூலம் அந்நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டி வேலையில் தொடரும் நிலையை உருவாக்குவதா என்று நினைக்க வேண்டும். இப்படி பார்க்கும்போது தனியாரிடம் அளித்து பணியில் தொடர்வதுதான் சிறந்த முடிவாக ஊழியர்களுக்கு இருக்க முடியும் என்றார்.
நஷ்டத்தில் இயங்கும் நிறு வனங்கள் அரசின் தயவில் வெறு மனே செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. நீண்ட கால நோக்கில் இது சரியான நடவடிக்கையாக இருக்காது. வரி செலுத்தும் மக்களின் பணம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்துக்கு தொடர்ந்து செல்வதை மக்கள் தொடர்ந்து அனுமதிக்க மாட்டார்கள் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
மொத்தம் 79 பொதுத்துறை நிறு வனங்கள் நஷ்டத்தில் செயல்படு கின்றன. இத்தகைய நிறுவனங் களில் அரசின் முதலீடு ரூ. 1.57 லட்சம் கோடி முடங்கியுள்ளது. மேலும் இத்தகைய நிறுவனங்களின் செயல்பாட்டுக்கென பட்ஜெட்டில் ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப் பட்டது. இத்தொகை வெறுமனே ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்கத்தான் பயன்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் அரசுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ. 43,425 கோடியைத் திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் ஜேட்லி கூறினார்.
வளர்ந்த நாடுகள் போடும் முட்டுக்கட்டை
உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதற்கு சில வளர்ந்த நாடுகள் முட்டுக்கட்டை போடுவதாக ஜேட்லி குற்றம் சாட்டினார். வர்த்தகம் சீராக நடைபெறுவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் எதிர்த்தது கிடையாது என்று தெளிவுபடுத்தி ஜேட்லி, பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை உணவு கையிருப்பு நிலை தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு ஆகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
1986-87-ம் ஆண்டு விலை நிலவர அடிப்படையில் மானிய ஒதுக்கீடு கணக்கிடக்கூடாது என்பதும் இந்தியாவின் வாதமாகும். திருத்தியமைக்கப்பட்ட விலையில் (2010 ஆண்டு விலையில்) உணவுக்கான மானியத்தைக் கணக்கிட்டால் இந்தியாவின் ஒதுக்கீடு 10 சதவீத அளவுக்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று அதிகாரிகள் 0தெரிவித்துள்ளனர்.
சீர்திருத்தங்கள்
தொழிலாளர் கொள்கையில் மாற்றம், நிலம் கையகப்படுத்துவது எளிமையாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று ஜேட்லி உறுதியளித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பிந்தைய வரி விதிப்பு எனும் நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் தேக்க நிலை ஏற்பட்டதோடு அந்நிய முதலீடுகளின் வரவும் பாதிக்கப்பட்டது என்றார்.