பொதுத்துறை நிறுவனங்களான ஆயில் இந்தியா மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய இரு நிறுவனங்கள் கடந்த எட்டு வருடங்களாக அசாம் அரசுக்கு செலுத்த வேண்டிய 11,591.72 கோடி ரூபாய் மதிப் புள்ள வட்டி மற்றும் ராயல்டி தொகையை நிலுவையில் வைத்துள்ளன.
இது தொடர்பாக அசாம் கண பரிஷத் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் பானி பூஷன் செளத்ரி கேள்வி எழுப்பினார். அதற்கு அசாம் மாநில கனிம மற்றும் தாது வளங்கள் துறை அமைச்சர் பிரமிளா ராணி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியது: ஆயில் இந்தியா மற்றும் ஓஎன்ஜிசி ஆகிய இரு நிறுவனங்களிடமிருந்து ஏப்ரல் 2008-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை கச்சா எண்ணெய்க்கான ராயல்டி மற்றும் வட்டித் தொகையான 13,042 கோடி ரூபாயை அசாம் அரசு பெறவேண்டியுள்ளது.
இதில் 1,449 கோடி ரூபாய் கடந்த வாரம் பெறப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை வாயு, சுண்ணாம்பு ஆகியவற்றிக் கான ராயல்டி தொகையிலிருந்து தான் மாநில அரசு அதிகமாக வருமானம் பெறுகிறது. 2001-02 நிதியாண்டிலிருந்து இந்த நான்கு பொருட்களிலிருந்து அரசுக்கு கிடைத்த ராயல்டி தொகை 20,217.65 கோடி ரூபாய். தற்போது 43 எண்ணெய் கிணறுகள் ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தில் தற்போது 223 மில்லியன் டன் கச்சா எண் ணெய்யும், 1,02,815 மில்லியன் கியூபிக் மீட்டரில் இயற்கை வாயுக்களும், 370 டன் நிலக்கரியும், 10 மில்லியன் டன் இரும்பு தாதுக்களும், 346 மில்லியன் கியூபிக் மீட்டர் கிரானைட்டும் கிடைக்கின்றன.