உலக அளவில் தேயிலை உற்பத்தியில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஏற்றுமதி சரிந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதி மதிப்பு 13.24 சதவீதம் சரிந்து 69.56 கோடி டாலராக இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் தேக்க நிலைதான் இந்த சரிவுக்குக் காரணம்.
கடந்த வருடம் இதே காலத்தில் 80.12 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடந்ததாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளின் தேவை அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து, ஈராக், யூ.ஏ.இ. போன்ற நாடுகளுக்குத்தான் இந்தியாவிலிருந்து தேயிலை அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 12.36 சதவீதம் அதிகரித்தது. கடந்த வருட பிப்ரவரியில் 5.77 கோடி டாலராக இருந்த ஏற்றுமதி இப்போது 6.49 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது.
தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளில் பாகிஸ்தான் முக்கியமானது. 2013-ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 2.5 கோடி கிலோ தேயிலையை பாகிஸ்தான் இறக்குமதி செய்தது. ஆனால் 2012-ம் ஆண்டில் 2 கோடி கிலோ இந்திய தேயிலையை மட்டுமே பாகிஸ் தான் இறக்குமதி செய்தது. 2012-13-ம் ஆண்டு மொத்தம் 21.62 கோடி கிலோ தேயிலையை இந்தியா ஏற்றுமதி செய்தது.