வணிகம்

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 406 புள்ளிகள் சரிவு

செய்திப்பிரிவு

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று (வியாழக்கிழமை) கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. செப்டம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு இதுவாகும்.

மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 406.08 புள்ளிகள் சரிந்து 20,229.05 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் 123 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 5,999 என்ற நிலைக்குச் சரிந்தது.

முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவைச் சந்தித்தது.

அமெரிக்காவில் பொருளாதார ஊக்க நடவடிக்கைகள் குறைக்கப்படும் என்று அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வெளியிட்ட செய்தியால் பங்குச் சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டது.

குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே இத்தகைய குறைப்பு நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொள்ளும் என்று புதன்கிழமை நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுவும் பங்குச் சந்தை சரிவுக்குப் பிரதான காரணமாகும்.

ஃபெடரல் ரிசர்வ் அறிவிப்பு காரணமாக டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் இன்று சரிந்து ஒரு டாலருக்கு 62.93 ரூபாயாக இருந்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் கடந்த அக்டோபர் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிக்கையாக புதன்கிழமை வெளியானது. அதில் கடன் பத்திரங்களை வாங்கும் நடவடிக்கையைக் குறைப்பது என்று பரவலாக அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. அமெரிக்காவில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்பட்சத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் கடன் பத்திரம் வாங்கும் திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் 8,500 கோடிக்கு கடன் பத்திரங்களை வெளியிடுவதெனவும், அதற்கு நீண்ட கால அடிப்படையிலான வட்டி வழங்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. இந்த ஊக்கநடவடிக்கைகளை வரும் மாதஙகளில் குறைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த அறிக்கை வெளியான சில நிமிஷங்களிலேயே அமெரிக்காவின் டோ ஜோன்ஸ் பங் சந்தையில் 66 புள்ளிகள் சரிந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தையிலும் சரிவு காணப்பட்டது. இதேபோல ஆசிய பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன.

SCROLL FOR NEXT