வணிகம்

டி.எல்.எப் பங்கு 28 சதவீதம் சரிவு

செய்திப்பிரிவு

டி.எல்.எப். நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு செபி மூன்று ஆண்டு கால தடை விதித்தை அடுத்து நேற்றைய வர்த்தகத்தின் டி.எல்.எப். பங்கு கடுமையாக சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 28.56 சதவீதம் சரிந்து 104.95 ரூபாயில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 29.99 சதவீத அளவுக்கு சரிந்தது. இதுதான் இந்த பங்கின் அதிகபட்ச சரிவாகும். நிப்டி பட்டியலில் இருக்கும் பங்குகளில் அதிகபட்சம் சரிந்தது இந்த பங்குதான்.

இந்த சரிவினால் ஒரே நாளில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7,438 கோடி ரூபாய் சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 18,701 கோடியாக இருந்தது. பாம்பே பங்குச்சந்தையில் 168 லட்சம் பங்குகளும், தேசிய பங்குச்சந்தையில் 8 கோடி பங்குகளும் வர்த்தகமாயின.டி.எல்.எப். மட்டுமல்லாமல் மற்ற ரியால்டி பங்குகளும் சரிந்து முடிவடைந்தன.

ஹெச்.டி.ஐ.எல். பங்கு 5.11 சதவீதம், யூனிடெக் 2.43 சதவீதம், டிபி ரியால்டி 2 சதவீதம் சரிந்தன. இந்த பங்குகளின் சரிவு காரணமாக பி.எஸ்.இ ரியால்டி குறியீடு 9.24 சதவீதம் சரிந்து முடிவடைந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த டி.எல்.எப். நிறுவனம் தாங்கள் எந்த மேல் முறையீட்டையும் செய்யவில்லை என்றும், செபி தடைக்கு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்திருக்கிறது.

ஜூன் 30-ம் தேதி முடிவடைந்த நிலையில் இந் நிறுவனத்துகு 19,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருக்கிறது. இதை சரி கட்டுவதற்காக 3,500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பத்திரங்களை வெளியிட திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.முக்கியமான புளூசிப் நிறுவனங்களுக்கு இதுபோன்ற தடை விதிப்பது அரிதிலும் அரிதானது.

வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிந்து 26349 புள்ளியில் முடிவடைந்தது. நிப்டி 20 புள்ளிகள் சரிந்து 7864 புள்ளியில் முடிவடைந்தது. ரியால்டி துறைக்கு அடுத்து ஐடி குறியீடு 83 புள்ளிகளும், ஆட்டோமொபைல் குறியீடு 74 புள்ளிகளும் சரிந்து முடிவடைந்தன். மாறாக வங்கித்துறை குறியீடு 93 புள்ளிகளும், மின்துறை குறியீடு 11 புள்ளிகளும் உயர்ந்து முடிவடைந்தன.

SCROLL FOR NEXT