சர்வதேச சூழ்நிலைகளால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் ஆரம்பித்தன. உக்ரைன் பிரச்சினை, சீனாவின் வளர்ச்சி குறையும் என்ற எதிர்பார்ப்பு ஆகிய காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை ஆரம்பித்தன. ஆனால் வர்த்தகத்தின் இறுதி ஒரு மணிநேரத்தில் ’ஷார்ட் கவரிங்’ காரணமாக பங்குச்சந்தைகள் உயர்ந்தன.
சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 21573 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தகம் மீண்ட போது அதிகபட்சமாக 21,853 புள்ளிகள் வரை கூட சென்செக்ஸ் சென்றது. ஆனால் வர்த்தகத்தின் முடிவில் 35 புள்ளிகள் உயர்ந்து 21810 புள்ளிகளில் சென்செக்ஸ் முடிந்தது. இதேபோல தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 11 புள்ளிகள் உயர்ந்து 6500 என்ற முக்கியமான புள்ளியை தாண்டி 6504 என்ற புள்ளியில் முடிவடைந்தது.
ஆனால் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 0.2 சதவீதம் வரை சரிந்து முடிவடைந்தது.
இதற்கிடையே பணவீக்க விகித எண்கள் 9 மாத குறைந்தபட்ச அளவாக வெளியானது. இதனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் கூட சந்தை உயர்ந்ததற்கு ஒரு காரணமாகும்.
உலக சந்தை நிலவரம்
வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்காவின் இரண்டு முக்கியமான சந்தைகளும் ஒரு சதவீதத்துக்கு மேல் சரிந்தன. இதன் தாக்கமாக வெள்ளிக்கிழமை ஆசியாவின் முக்கிய சந்தைகளும் சரிவில் முடிந்தன. ஜப்பான் சந்தையான நிக்கி 3 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. கடந்த ஒருமாத குறைந்தபட்ச புள்ளியில் நிக்கி வர்த்தகமாகிறது. இந்த வாரத்தில் மட்டும் 6 சதவீதத்துக்கு மேலே நிக்கி சரிந்திருக்கிறது. ஹாங்செங் 1.01 சதவீதமும், கோஸ்பி 0.75 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன.
பங்குகளின் நிலைமை
வங்கி, கன்ஸ்யூமர் டியூரபிள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகள் சரிவடைந்தன. கேபிடல் குட்ஸ், ரியால்டி, ஹெல்த்கேர், ஆகிய துறை பங்குகள் சிறிதளவு ஏற்றம் பெற்றன.
சென்செக்ஸ் பங்குகளில் பி.ஹெச்.இ.எல்., எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், சிப்லா மற்றும் டாக்டர் ரெட்டீஸ் ஆகிய பங்குகள் ஏற்றம் அடைந்தன.
அதேபோல, விப்ரோ, பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்.டி.,எஃப்.சி., மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ஆகியவை சென்செக்ஸ் பங்குகளில் அதிகம் சரிந்தன.