வணிகம்

ஹோண்டா டபிள்யூஆர்-வி பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம்

செய்திப்பிரிவு

கார் உற்பத்தியில் முன்னணியில் திகழும் ஜப்பானின் ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய ரக டபிள்யூஆர்-வி மாடல் காரை சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தியது. 6 கண்கவர் வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த காருக்கு இதுவரையில் 3 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் தெரிவித்தார்.

முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் ஹோண்டா நிறுவனத்தின் தபுகரா ஆலையில் தயாராகிறது. இந்த மாடல் காரை பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் உள்ளதாக அவர் கூறினார்.

தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ள ஹோண்டா சிவிக் மாடல் கார்களை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டமும் உள்ளதாக அவர் கூறினார்.

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிட்டி மாடல் காருக்கு இதுவரை 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.

இதில் உயர் ரகமான இஸட் எக்ஸ் மாடலை முன்பதிவு செய்துள்ளோர் 40 சதவீதம் என்றார்.

தற்போது 24 நகரங்களில் 336 விற்பனையகங்கள் உள்ளன. இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 370 ஆக விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள தாகக் கூறினார்.

2.1 லிட்டர் ஐவி டெக் பெட்ரோல் மாடல் காரின் சென்னை விற்பனையக விலை ரூ.7.90 லட்சமாகும். டீசல் காரின் விலை ரூ.10.15 லட்சமாகும்.

ஹோண்டா கார்களின் மொத்த விற்பனையில் தென்னகத்தின் பங்கு மூன்றில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT