வணிகம்

வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் 16 இடங்களில் சிபிஐ நடத்திய ஆய்வில் முறைகேடாக ரூ.100 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆக்ஸிஸ் வங்கி ஊழியர்கள் உட்பட 12 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் சிபிஐ கண்டறிந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி 5,00 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு அகமதாபாத் நகரில் மெம்நகர் ஆக்ஸிஸ் வங்கி கிளையில் போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.100.57 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையை மீறி இந்த டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டதற்காக மெம்நகர் ஆக்ஸிஸ் வங்கி கிளை மேலாளர் யாஷா மேத்தா, செயல்பாட்டு தலைவர் அபிமன்யூ சிங் நாருகா, வாடிக்கையாளர் தொடர்பு அலுவலர் ரீட்டா குமார் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் ஊழியர்களின் வீடு என 16 இடங்களில் சிபிஐ ஆய்வு நடத்தியுள்ளது.

``வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகள் உதவியுடன் கடன் கணக்குகளில் மூன்று குழுவினர் முறைகேடாக பணத்தை டெபாசிட் செய்துள்ளனர் என்று சிபிஐ செய்தி தொடர்பாளர் ஆர்.கே.கவுர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: சஞ்சய் மனு சோனி, சவுரின் சோனி மற்றும் சமீர் ஆகியோர் சேர்ந்து முதல் குழுவாக பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். பின்பு இரண்டாவது குழுவில் ஹிமான்சு அகர்வால், ஜெய்தீப், ஜேடி ஷெரோப் மற்றும் அப்சல் ஆகியோர் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். மூன்றாவது குழுவில் கிரண் பாரேக் மற்றும் ஹிதேஷ் பாரேக் ஆகிய இருவரும் சேர்ந்து பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். கடந்த நவம்பர் முதல் டிசம்பர் வரை போலி நிறுவனங்கள் கணக்குகளில் முறைகேடாக மிகப் பெரிய தொகைக்கு பணப் பரிமாற்றம் செய்வதற்கு வங்கி அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

முதல் குழு 55.70 கோடி ரூபாயும் இரண்டாவது குழு 41.62 கோடி ரூபாயும் மூன்றாவது குழு 3.25 கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளது. மேலும் வங்கியில் சுமார் ரூ.13 கோடி டெபாசிட் செய்யப்பட்டதற்கான பண சேமிப்பு படிவம் வங்கிக் கிளையில் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT