வணிகம்

மும்பை பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

செய்திப்பிரிவு

மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரே நாளில் 256 புள்ளிகள் சரிந்ததில் சென்செக்ஸ் குறியீட்டெண் 20,635 புள்ளிகளாக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையிலும் கடும் சரிவு காணப்பட்டது. மொத்தம் 80 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 6,122 புள்ளிகளாகக் குறைந்தது.

இதனிடையே, டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பிலும் சரிவு காணப்பட்டது. 25 காசுகள் அளவுக்கு சரிந்ததில் ஒரு டாலருக்கு ரூ. 62.63 தர வேண்டியதாயிற்று.

கடந்த மூன்று தின வர்த்தகத்தில் பங்குச் சந்தை கணிசமான ஏற்றம் பெற்றது. மொத்தம் 696 புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் புதன்கிழமை ஒரே நாளில் 256 புள்ளிகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிய பிராந்தியத்தில் ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது. சீனா, ஹாங்காங் பங்குச் சந்தைகளில் கணிசமான முன்னேற்றம் தென்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் முக்கியமான 30 முன்னணி நிறுவன பங்குகளில் ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இன்ஃபோசிஸ், ஹெச்டிஎப்சி வங்கி, லார்சன் அண்ட் டியூப்ரோ, பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ ஆகிய நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.

சிஐஎல், டாடா பவர், சீசா ஸ்டெர்லைட், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின.

SCROLL FOR NEXT