குஜராத் மாநிலத்தில் தொழில் தொடங்க பல ஜப்பானிய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. சிறந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிறுவனங்களுக்கான எளிய கொள்கைகள் குஜராத் மாநிலத்தில் உள்ளதாக இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் தகேஷி யாகி குறிப்பிட்டார்.
ஏறக்குறைய 12-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளன என்று குறிப்பிட்ட அவர், தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாகவும், ஸ்திரமான அரசியல் சூழல் நிலவும் மாநிலமாகவும் குஜராத் திகழ்வதாக குஜராத் தேசிய நகர்ப்புற மேம்பாட்டு மாநாட்டில் பேசுகையில் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே 60 ஜப்பானிய நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தில் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். இங்கு செயல்படும் ஜப்பானிய நிறுவனங்கள் தங்களது தொழிலை திறம்பட நடத்துவதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாகக் கருதுகின்றன. மேலும் தொழில் தொடங்க தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த மிக எளிமையான கொள்கைகள் உள்ளன, தேவையான அளவுக்கு மின்சாரம் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது, மேலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் ஜப்பானிய நிறுவனங்கள் பலவும் குஜராத் மாநிலத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டின. மாருதி சுஸுகி நிறுவனம் தனது மூன்றாவது ஆலையை குஜராத் மாநிலத்தில் அமைத்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தில்லி-மும்பை இண்டஸ்ட்ரியல் காரிடார் மற்றும் பிரத்யேக சரக்கு போக்குவரத்து பிரிவு உருவாக்குவதிலும் ஜப்பான் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்துள்ளன. கடந்த மே மாதத்தில் 324 கோடி டாலர் (ரூ. 17,500 கோடி) டிஎம்ஐசி திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு மொத்தம் 10,000 கோடி டாலர் செலவாகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இத்திட்டத்துக்கு 450 கோடி டாலர் முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த தொழில்நகர் இணைப்புத் திட்டம் மூலம் அடுத்த 30 ஆண்டுகளில் 9,000 கோடி டாலர் முதல் 10,000 கோடி டாலர் வரை அன்னிய முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திரவ இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) இறக்குமதி செய்வதில் குஜராத் மாநிலம்தான் நுழைவாயிலாகத் திகழ்கிறது. மேலும் மாநிலத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 1,000 ஜப்பானிய நிறுவனங்கள் செயல்படும் என்று யாகி தெரிவித்தார்.