வணிகம்

ரகுராமின் ஆச்சரிய அணுகுமுறை; ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் மாற்றமில்லை

செய்திப்பிரிவு

கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. புதன்கிழமை ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதிக் கொள்கை வெளியானது. அதில் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கு பெருமளவு நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது.

ஆர்பிஐ-யின் இந்த நடவடிக்கையால் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் இன்றி 7.75 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும்.

வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு (சிஆர்ஆர்) எவ்வித மாற்றமும் இன்றி 4 சதவீத அளவிலேயே தொடரும்

பணவீக்க உயர்வு மற்றும் தொழில்துறை உற்பத்தி சரிவு ஆகியவை காரணமாக கடனுக்கான வட்டி விகிதம் கால் சதவீதம் உயர்த்தப்படலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இதையே பெரும்பாலான நிபுணர்களும் கூறி வந்தனர். ஆனால் வட்டி விகிதத்தை உயர்த்தாமல் அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

இருப்பினும் எதிர்காலத்தில் ஏற்படும் பணவீக்க சூழலுக்கு ஏற்பட வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படும் என்று ராஜன் தெரிவித்தார். அத்தோடு அமெரிக்க ஃபெடரல் ரிசரவ் நடவடிக்கைக்கேற்ப வட்டி விகிதம் மாற்றப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் அடுத்த காலாண்டு நிதிக் கொள்கை ஜனவரி 28-ம் தேதி வெளியாகும்.

கடந்த செப்டம்பரில் ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்ற ரகுராம் ராஜன் இதுவரை இருமுறை வட்டி விகிதத்தை மாற்றியமைத்துள்ளார். இதன்படி இதுவரை 0.50 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வெளியானபிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் வழக்கம் முந்தைய ரிசர்வ் வங்கி கவர்னராயிருந்த டி. சுப்பாராவ் செய்ததில்லை. ஆனால் ரகுராம் ராஜன் பேட்டியளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்காக ஆர்பிஐ தனது நிதிக் கொள்கையை எடுத்துள்ளதாக ராஜன் கூறினார்.

ஆனால் பதவியேற்றதிலிருந்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் தனது பிரதான குறிக்கோள் என்று கூறிவந்த ராஜன், இப்போது முதல் முறையாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தவில்லையென்றாலும், இதற்காக வட்டி விகிதத்தை மாற்றியமைக்கப் போவதில்லை என்று எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

இது நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கும் என்றபோதிலும் ஏற்கெனவே எஸ்பிஐ-யில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கிது. இருப்பினும் வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து இப்போது பரிசீலிக்கப் போவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.

இப்போதைய சூழ்நிலையில் வட்டி விகிதம் குறைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் வி.ஆர். ஐயர் தெரிவித்தார். இருப்பினும் அதிகபட்ச முதலீட்டுக்கான டெபாசிட் வட்டி விகிதம் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி ஒருபுறமும், மற்றொரு புறத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயமும் ஆர்பிஐ-க்கு உள்ளது. இது மிகவும் கடினமான பணி. இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்துடன் பணவீக்கம் எந்த திசை நோக்கி செல்கிறது என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் சி. ரங்கராஜன்.

நவம்பர் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக பணவீக்கம் 11.24 சதவீதம் உயர்ந்தது. சில்லறை விற்பனை விலைக் குறியீட்டெண் 14 மாதங்களில் இல்லாத அளவாக 7.52 சதவீதமாக உயர்ந்தது.

பணவீக்கம் டிசம்பர் மாதம் குறையும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உணவுப் பொருள்களின் வரத்து அதிகரித்திருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்று தங்களது கருத்துக்கு வலு சேர்த்துள்ளனர்.

பொருளாதார தேக்க நிலை, ஸ்திரமற்ற தன்மை உள்ளிட்ட பல சூழல்களில் இப்போதை பணவீக்கம் அதிகமாக இருந்தபோதிலும் வட்டி விகிதத்தை மாற்றாத கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரகுராம் ராஜன் குறிப்பிட்டார். இருப்பினும் இது குறைவதற்கான சூழலுக்குக் காத்திருப்பதாக அவர் கூறினார். இரண்டாம் அரையாண்டில் முன்னேற்றமடைவது வேளாண் துறை மற்றும் ஏற்றுமதியைச் சார்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் பாதியில் நின்று போன திட்டப் பணிகள் நடைபெறுவதைப் பொறுத்து வளர்ச்சி இருக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

ரூ. 17 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் போதிய நிதியன்றி முடங்கியுள்ளன. இவற்றில் சில வங்கிக் கடனை முழுவதுமாக பெற்றபோதிலும் நின்று போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக இருந்தது. முதல் காலாண்டில் இது 4.4 சதவீதமாக இருந்தது. சராசாரியாக அரையாண்டு வளர்ச்சி 4.6 சதவீதமாகும்.

இருப்பினும் அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி -1.8 சதவீதமாக சரிந்தது. கடந்த நான்கு மாதங்களில் இல்லாத சரிவு இதுவாகும்.

பல்வேறு பாதக சூழல் நிலவியபோதிலும் நடப் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) இரண்டாம் காலாண்டில் 1.2 சதவீதம் குறைந்தது. இதற்கு தங்கம் இறக்குமதி பெருமளவு குறைந்தது முக்கியக் காரணமாகும். முதல் காலாண்டில் (ஏப்ரல் ஜூன்) நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 4.9 சதவீதமாக இருந்தது. இப்போதைய சூழலில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறைந்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

உணவுப் பணவீக்கம் எதிர்வரும் காலத்தில் குறையாவிட்டால், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டியை உயர்த்தும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி நிச்சயம் எடுக்கும் என்று ராஜன் கூறினார்.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நடப்பு நிதி ஆண்டில் 5,600 கோடி டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT