வணிகம்

8000 புள்ளிகளை கடந்தது நிப்டி

செய்திப்பிரிவு

ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று முகூர்த் டிரேடிங் நடப்பது வழக்கம். நேற்று தீபாவளி அன்று முகூர்த் டிரேடிங் மாலை 6.15 மணி முதல் 7.30 மணி வரை நடந்தது. இதில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி மீண்டும் 8000 புள்ளிகளை கடந்து முடிந்தது. வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து 8014 புள்ளியில் முடிவடைந்தது. சென்செக்ஸ் 63 புள்ளிகள் உயர்ந்து 26851 புள்ளியில் முடிவடைந்தது.

புதன்கிழமை நடந்த வர்த்தகத்தின்போது அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 7.54 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய சந்தையில் முதலீடு செய்தார்கள். கடந்த வருடம் தீபாவளி முதல் இந்த வருட தீபாவளி வரை இந்திய பங்குச்சந்தைகள் 26 சதவீதம் உயர்ந்திருக்கின்றன.

சென்செக்ஸ் பங்குகளில் 9 பங்குகள் சரிந்து முடிவடைந்தன. இதில் விப்ரோ பங்கு அதிகமாக சரிந்து முடிவடைந்தன. புதன் கிழமை வெளியான காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய முடியாததால் 4 சதவீதம் வரை விப்ரோ பங்குகள் சரிந்தது. மேலும் பி.ஹெச்.இ.எல்., டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, சிப்லா ஆகிய பங்குகளும் சரிந்தன. மாறாக, பஜாஜ் ஆட்டோ, ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ், ஹிண்டால்கோ மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.

என்.எஸ்.இ.எல். நிறுவனத்தை பைனான்ஸியல் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வரைவு ஆணை பிறப்பித்ததால் அந்த பங்கு சில நாட்களுக்கு முன்பு சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 8.7 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தது. இந்திய பங்குச்சந்தைகளுக்கு இன்றும் விடுமுறை ஆகும்.

SCROLL FOR NEXT