ஹெச்டிஎப்சி லாபம் ரூ. 2,797 கோடி
வீட்டுக் கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ள ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் 27 சதவீதம் அதிகரித்து ரூ.2,796 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் கடந்த நிதி ஆண்டு இதே காலத்தில் ரூ. 2,204 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது.
ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் ரூ. 13,516 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ.11,397 கோடியாக இருந்தது. இந்த காலாண்டில் ஹெச்டிஎப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸின் 12.33 கோடி பங்குகளை எர்கோ இண்டர்நேஷனல் ஏஜி நிறுவனத்துக்கு விற்றது. இதனால் ரூ. 871.35 கோடி வருமானம் கிடைத்துள்ளது. வர்த்தகம் முடிவில் ஹெச்டிஎப்சி பங்குகள் 1.48 சதவீதம் உயர்ந்து ரூ. 1,387.85 விலையில் வர்த்தகமானது.
டாபர் லாபம் 12% உயர்வு
எப்எம்சிஜி பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டாபர் நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ. 293 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபத்தைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும்.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.261 கோடியாகும். நிறுவனத்தின் விற்பனை வருமானம் முதல் காலாண்டில் ரூ. 1,923 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 1,901 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் ரூ. 500 கோடியை விரிவாக்க நடவடிக்கைகளுக்கு செலவிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் 0.49 சதவீதம் உயர்ந்து ரூ.304.85 விலையில் வர்த்தகமாயின.
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் லாபம் ரூ. 374 கோடி
வாகனக் கடன் அளிப்பதில் முன்னணியில் திகழும் தனியார் என்பிஎப்சி நிறுவனமான ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ. 374 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 321 கோடியாக இருந்தது.
வட்டி மூலமான வருமானம் ரூ. 1,346 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ. 1,135 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒரு பங்கு ஈட்டும் வருமானம் ரூ. 14.15-லிருந்து ரூ. 16.49 ஆக உயர்ந்துள்ளது.
நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 74,808 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ. 60,531 கோடியாக இருந்தது.
பஜாஜ் ஆட்டோ லாபம் 13.77% உயர்வு
இருசக்கர மற்றும் ஆட்டோ தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் 13.77 சதவீதம் அதிகரித்து ரூ. 1,039 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 913 கோடியாகும்.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 6,088 கோடியாகும். முந்தைய ஆண்டில் இது ரூ.5,881 கோடியாக இருந்தது. தற்போது வருமானம் 3.52 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதே காலாண்டில் வாகன விற்பனை 2 சதவீதம் குறைந்துள்ளது மொத்தம் 9.94 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஏற்றுமதி 22 சதவீதம் குறைந்துள்ளது. நிறுவன பங்கு விலை 1.19 சதவீதம் சரிந்து ரூ. 2,701.95 என்ற விலையில் வர்த்தகமானது.