ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா ஜேபி நிறுவனத்துக்குச் சொந்தமான ஜேபி சிமென்ட் ஆலையை வாங்குகிறார். ஏற்கெனவே ஆதித்ய பிர்லா குழுமம் அல்ட்ரா டெக் எனும் பெயரில் சிமென்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஜேபி சிமென்ட் ஆலையை ரூ.3,800 கோடிக்கு பிர்லா வாங்கியுள்ளார்.
நிறுவனத்தைக் கையகப்படுத்தும் பணி அடுத்த 9 மாதங்களுக்குள் நிறைவுபெறும். இந்த ஆலையை வாங்கியதன் மூலம் குஜராத் மாநிலத்துக்குள் தடம்பதித்துள்ளது பிர்லா குழுமம். இந்த ஆலை ஆண்டுக்கு 48 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.
இந்த ஆலையை வாங்கியதன் மூலம் பிர்லா குழும நிறுவனங்களின் சிமென்ட் உற்பத்தி ஆண்டுக்கு 5.90 கோடி டன்னாக உயரும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 7 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அல்ட்ரா டெக் நிறுவனத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார்.
ஜேபி குழுமத்துக்கு ரூ. 55 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இந்த ஆலையை விற்று கிடைக்கும் தொகையில் தங்களது கடன் சுமையைக் குறைத்துக் கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.