வரி தொடர்பான வழக்குகளை விரைவாக முடிக்கும் வகையில் நிலுவையில் உள்ள வழக்குகளை `ஒரு முறை சமரச தீர்வு திட்டத்தை’ பயன்படுத்தி தீர்த்துக் கொள்ளும்படி வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வரி வழக்குகள் நிலுவையில் உள்ள 2.59 லட்சம் நபர்களுக்கு இ-மெயில் மூலம் விரைவில் தகவல் அனுப்பப்பட உள்ளதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆணையர் முன்பும் கிட்டத்தட்ட 300 முதல் 400 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. வழக்குக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் இ-மெயில் அனுப்ப இருக்கிறோம். மேலும் இந்தத் திட்டத்தின் பயன்கள் குறித்து அந்த இ-மெயிலில் தெரிவிக்க இருக்கிறோம் என்று வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஜுன் மாதம் 1-ம் தேதி நேரடி வரி சமரச தீர்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் டிசம்பர் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை தகவல் படி ரூ.10 லட்சத்திற்கு மேலும் வரி வரம்புக்குள் வருபவர்களில் 73,402 மேல்முறையீடுகளும் 10 லட்சத்திற்கு கீழ் வரி வரம்புக்குள் வருபவர்களில் 1,85,858 மேல்முறையீடுகளும் நிலுவையில் உள்ளன. சுமார் 2,59,260 நபர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தகுதி உடையவர்களாவர்.
தாமாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டம் மற்றும் சமரசத் தீர்வு திட்டம் ஆகிய இரண்டையும் விளம்பரப்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வரி வழக்கை சந்தித்து வரும் நிறுவனங்களுக்கு வருமான வரித்துறை புதிய திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறது.
இந்த திட்டத்தின்படி வரி செலுத்துபவர் மேல்முறையீட்டு வழக்கு சிஐடி முன்பு நிலுவையில் இருந்தால் குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து மதிப்பீடு செய்யப்பட்ட வரி மற்றும் அதற்கான வட்டியையும் செலுத்தி வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.