வங்கி கடன் அளிப்பதில் ரீடெய்ல் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஐடிபிஐ வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் ரபிநாரயண் பாண்டா தெரிவித்துள்ளார். ஐடிபிஐ வங்கிக்கும் வாடிக்கை யாளர்களுக்கும் உள்ள உறவை மேம்படுத்தவும் முதலீடுகளை அதிகரிக்கவும் ரீடெய்ல் துறைக்கு முன்னுரிமை அளிக்க முடிவெடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ஐடிபிஐ வங்கியின் மொத்த வாராக்கடன் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் வங்கியின் வாராக்கடன் ரூ.24,875 கோடியாக இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் ரூ.44,752 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வாராக்கடனில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு 78 சதவீதமாக உள்ளது. வாரக்கடனை மீட்பதற்கு பல்வேறு உத்திகளை ஐடிபிஐ வங்கி எடுத்து வருகிறது. வாராக்கடனை மீட்பதற்காக மண்டல வாரியாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அடுத்த சில காலங்களுக்கு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதை குறைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது 50 சதவீத கடன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் 50 சதவீத கடன் ரீடெய்ல் கடன் களாகவும் வழங்க திட்டமிட்டுள் ளோம். தேவைப்பட்டால் ரீடெய்ல் கடன்களை அதிகம் வழங்கவும் முடிவெடுத்துள்ளோம். ஏனெனில் ரீடெய்ல் கடன்களை பொறுத்தவரை வாராக்கடனின் அளவு குறைவாக இருக்கிறது. கடனை மீட்பதற்கும் எளிதாக இருக்கிறது. அதனால் ரீடெய்ல் துறை கடன்களை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் வங்கி, செயல்பாட்டு செலவினங்களை குறைக்க திட்டமிட்டு வருகிறது. வங்கியின் முக்கியமில்லாத சொத்துகளை விற்று ரூ.5,000 கோடி நிதி திரட்ட வங்கி திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.