வணிகம்

மத்திய வர்க்க நிதர்சனங்கள்

டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

அந்த பேச்சு நிகழ்ச்சி (அதாங்க talk show) எனக்குப் பிடிக்கும். நிகழ்ச்சி வழங்கும் கோட்டுக்காரர் என் நீண்ட கால நண்பர் என்பதால் மட்டுமல்ல. இயக்குனர் தேர்ந்தெடுக்கும் விஷயங்களும் தேர்ந்த விருந்தினர்களை அழைத்து பங்களிக்க வைக்கும் நேர்த்தியும் பிடிக்கும்.

சென்ற வாரம் வாக்குரிமை பற்றி பெண்கள் இரு அணிகளாக உட்கார்ந்து பேசினார்கள். கவலையும் பெருமிதமும் கலவையாக ஏற்பட்டது. குடும்பம், வேலை, பொழுதுபோக்குகள் போல அரசியல் நாட்டம் அளிப்பதாக இல்லை என்று ஒரு புறமும், நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் அரசியல் உள்ளது; விழிப்புணர்வு அவசியம் என்று மறுபுறமும் பேசியது.

சில ஆசிரியைகள் தன் வேலை மாணவர்களை பாஸ் செய்ய வைப்பது மட்டும்தான் என்று பேசியது கேட்டு வழக்கம் போல அதிர்ந்தேன். ஆங்கிலப்பாடம் நடத்தும் தனக்கு வரலாறு தெரியத் தேவையில்லை என்றார் ஒருவர். அரசியல் எல்லாம் பள்ளி மாணவனுக்கு புரியாது என்றார் இன்னொருவர்.

இரு தரப்பினரும் மத்திய வர்க்க குணம் பற்றிப் பேசியது யோசிக்க வைத்தது. மத்திய வர்க்கம் தன்னைச் சுற்றி வாழும் சமூகத்தைப் பற்றிக் கவலைப் படுவதை மெல்ல மெல்ல நிறுத்தி வருகிறது என்று சந்தேகிக்கிறேன்.

மேல்தட்டு வர்க்கம் எவ்வளவு வலிமையானது என்றும் உணரவில்லை. கீழ்தட்டு வர்க்கம் எவ்வளவு நசுங்கி யுள்ளது என்பதையும் உணரவில்லை. வளர்ந்து வரும் மத்திய வர்க்கம் நாட்டின் சமூக, பெருளாதார, அரசியல் மாற்றங்களை தோற்றுவிக்கும் பெரும் சக்தியாக உருவாகி வருகிறது. மத்திய வர்க்கத்தினர் நவீன சந்தையின் பெரும் வாடிக்கையாளர்கள். அதன் அரசியல் விளையாட்டின் பகடைக் காய்கள். ஆனால் புதிதாக கிடைத்த பல வசதிகள் தந்த கிளர்ச்சியில் சில அடிப்படை விழுமியங்களை நழுவ விட்டுக் கொண்டிருப்பவர்கள் என்பது என் எண்ணம்.

உலக செல்வந்தர்களின் புள்ளி விவரத்தை Forbes பத்திரிகை வெளியிட்ட சிறப்புக் கட்டுரையில் படிக்க நேர்ந்தது. 0.000001 % வாழ் மக்கள்தான் உலகின் பெரும் செல்வத்தை தேக்கி வைத்திருக்கிறார்கள் என அறிந்தேன். உலகின் முதல் 50 பில்லினியர்களில் பாதிக்கு மேல் அமெரிக்காவில் வாழ்கிறார்கள். உலகின் 40வது இடத்தில் ஒரே ஒரு இந்திய பில்லினியர்தான் இருக்கிறார் பாவம். வெறும் 18.6 பில்லியன் ஆண்டு வருமானம்தான். 796வது இடத்தில் (2.2 பில்லியன் வருமானம்) தமிழ் நாட்டை சேர்ந்தவர் ஒருவர் இருக்கிறார்.

இது தணிக்கை செய்து வெளியிடப்பட்ட வெறும் தனி நபர் வருமான அறிக்கை தான். இது கார்பரேட் நிறுவனங்களின் மதிப்பு சேராதவை. இவை தவிர கணக்கில் வராத செல்வமும், மதம் சார்ந்த அமைப்புகள், தொண்டு நிறுவனங்களில் முடங்கும் சொத்துகளின் மதிப்பைக் கணிக்கிட்டுப் பகிர்ந்தால் தனி நபருக்கு உணவில்லை என்று ஜகத்தையெல்லாம் எரிக்கத் தேவையில்லை.

எல்லா காலங்களிலும் உலகில் நான்கில் ஒருவராவது இரவில் பசியோடு தூங்கப் போகிறார் என்று படிக்கும்போதுதான் நமக்கு கீழே உள்ளவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்று தெரிகிறது.

முன்பு வறுமை பற்றிய புரிதல் இருந்தது மத்திய வர்க்கத்திடம். நம் கீழே உள்ளவர்கள் என்கிற பரிவு இருந்தது. இன்று நமக்கு மேலுள்ள தட்டுக்களை அடையும் அவசரத்தில் கீழ் தட்டுக்களை முழுதாக புறக்கணிக்க ஆரம்பித்தாயிற்று. இலவசம், மானியம், சலுகை, இட ஒதுக்கீடு என்றால் எக்காளம்.

விளிம்பு நிலை மனிதர்களை வழித்தெறியும் திட்டங்களுக்கு ‘வளர்ச்சி’ என்கிற பெயரில் கண்மூடித்தனமான ஆதரவு. சரித்திரமும் மறந்து வருங்காலத்தையும் கணிக்க முடியாமல் மத்திய வர்க்கம் ஒரு வித்தியாச Time Warp ல் சிக்கியுள்ளது.

பிழைப்பிற்கும், தன்னைச் சுற்றியுள்ளோர் முன் நல்ல பெயரெடுக்கவும் எதையும் செய்யலாம் என்றுதான் வீடும் பள்ளியும் பணியிடமும் சொல்லித் தருகின்றன. எல்லாத் தட்டுக்களையும் தாங்கும் அடிமட்ட வர்க்கத்தை பாதுகாப்பதும் நம் சமூகக் கடமை என்று எங்குமே பேசப்படுவதில்லை. நலிந்தவர்களை காக்கும் நற்குணம் இழந்தால் நேரும் அபாயம் எவ்வளவு பயங்கரமானது? நாளை நாமும் வயோதிகராய், நோயுற்ற வராய், வருமானமற்றவராய், தனிமை பீடித்துள்ளோராய், மொழி/இன சிறுபான்மையினராய், இயற்கைப் பேரழிவின் அகதியாய், தாய் மண்ணை விட்டு வாழும் அகதியாய்... ஏதாவது ஒரு வழியில் நலிந்த நிலைக்கு நிர்பந்திக்கப்படலாம். வருங்காலம் மூடி வைத்திருக்கும் புதிரை யார் அறிவார்?

நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அப்படி பிறரையும் நடத்தலாமே? இந்த சமூக நோக்கும் மனித நேயமும் இல்லாத கல்வியும் தொழிலும் ஆபத்தானவை என்று ஏன் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?

முன்பு, நம் கூட்டுக் குடும்பங்களில் ஒரு சொற்ப வருமானத்தில் ஒரு விதவை அத்தைப்பாட்டிக்கும், நோயுற்ற கொள்ளுத்தாத்தாவுக்கும், வேலை இழந்த பெரியப்பாவுக்கும் இடம் இருந்தது. இன்று பெட்ரூம்கள் எண்ணிக்கை ஆட்கள் எண்ணிக்கையை விட அதிகமாகியுள்ளதுதான் வளர்ச்சி.

வீட்டிலும் நாட்டிலும் வளர்ச்சி என்பது எதனால் வருவது என்று யோசிக்க வேண்டும். விவாதம் செய்ய வேண்டும். அடுத்த கட்ட பொருளாதார பாய்ச்சலுக்கு தயாராக உள்ள மத்திய வர்க்கம் இதை யோசித்து வாக்களிக்க வேண்டும்.

கட்டடங்களும் கார்களும் கடனுமான வளர்ச்சியா? அன்பும் அமைதியும் நேசமுமான வளர்ச்சியா? நம் ஒற்றை வாக்கில் வருங்கால இந்தியா கொஞ்சம் செதுக்கப்படுவது என்பதை உணர்ந்து வாக்களிப்போம்!

gemba.karthikeyan@gmail.com

SCROLL FOR NEXT