முறைகேடாக செயல்பட்ட நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தை (என்.எஸ்.டி.எல்) அதன் தாய் நிறுவனமான பைனான்ஸியல் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் (எப்டிஎல்) இணைக்க மத்திய அரசு வரைவு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த ஆணை மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இது குறித்த மத்திய அரசின் உத்தரவு தங்களுக்கு வந்ததாகவும், அதற்குரிய நடவடிக்கையை சட்ட ஆலோசகர்களுடன் கலந்து பேசிய பின் எடுக்கவிருப்பதாகவும் பங்குச் சந்தைகளுக்கு பைனான்ஸியல் டெக்னாலஜீஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த இரு நிறுவனங்களையும் இணைப்பதற்கு முடிவெடுத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. எஸ்.எஸ்.இ.எல். 5,600 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டது. இந்த நிறுவனங்களும் ஜிக்னேஷ் ஷாவால் ஆரம்பிக்கப்பட்டவை. இந்த வரைவு ஆணையை மத்திய அரசு பிறப்பித்தாலும், இந்த இரு நிறுவனங்களின் இயக்குநர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் 60 நாட்களுக்குள் தங்களது கருத்துகளை தெரிவிக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறது.
இந்த உத்தரவில் என்.எஸ்.இ.எல் நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான பைனான்ஸியல் டெக்னாலஜீஸ் இந்த விவகாரத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தது. மேலும் என்.எஸ்.இ.எல். நிறுவனத்தில் எந்தவிதமான சொத்துகளோ, மனிதவளமோ இல்லை. அதனால் பைனான்ஸியல் டெக் நிறுவனத்துடன் இணைப்பதன் மூலம்தான் இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
பார்வேர்ட் மார்க்கெட் கமிஷனும் இந்த இணைப்பு குறித்து ஏற்கெனவே கம்பெனி விவகாரத் துறை அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தது. என்.எஸ்.இ.எல் முறைகேட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு பைனான்சியல் டெக்னாலஜீஸ்தான் முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு காரணமாக பைனான்ஸியல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் சரிந்து முடிந்தன. வர்த்தகத்தின் முடிவில் 169.70 ரூபாயில் இந்த பங்கு முடிந்தது. என்.எஸ்.இ.எல். விவகாரத்தில் 5,600 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருக்கிறது. இதில் 13,000 முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.