ஏற்றுமதி மையமாக இந்தியா உருவாக வாய்ப்புகள் அதிகம் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
சீனாவின் பொருளாதாரம் மந்தமடைந்தது நமக்கு ஒரு வாய்ப்பாக உருவாகி உள்ளது. உற்பத்தி செலவுகள் சீனாவில் உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது கவனம் செலுத்துகின்றனர். இந்த விஷயத்தில் சீனாவை நாம் முந்துவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
உற்பத்தி துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக, இந்தியா உற்பத்தி மையமாக மாறுவது கடினம் என்று சிலர் எதிர்மறை கருத்துகள் கூறிவருகின்றனர். ரோபட் மற்றும் 3டி பிரிண்டிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட எதுவும் தடுக்க முடியாது.
அடுத்த மாதம் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை வர இருக்கிறது. இந்த கொள்கையை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தருணம் வந்தாகிவிட்டது. பணவீக்கத்துக்கு குறைவான இலக்கு நிர்ணயம் செய்து, வளர்ச்சிக்கு ஏற்றவாறு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். குறுகிய கால கடனுக்கு வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டும். பணவீக்கத்துக்காக இலக்கு 2 முதல் 4 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
வளர்ந்துவரும் நாடுகளில் 2 சதவீதம் என்பது நான் கேள்விப் படாத ஒன்று. வளர்ந்த நாடுகளில் 2 சதவீதம் பணவீக்கம் இருக்கலாம். இந்த இலக்கினை நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இப்போதைக்கு 0.50 சதவீதம் அளவுக்கு வட்டி விகிதம் அதிகமாக இருப்பதாகவே நினைக்கிறேன் என்று கூறினார். வரும் பிப்ரவரி 2-ம் தேதி ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கை அறிவிப்பு வெளியாக இருக்கிறது.