நிதி ஆயோக் அமைப்பு இரண் டாம் கட்ட பங்கு விலக்கல் நட வடிக்கைகளுக்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் முதற்கட்ட பங்கு விலக்கல் பட்டியலை மத்திய அர சுக்கு நிதி ஆயோக் அளித்துள்ளது. இதன் அடுத்த கட்ட பட்டியல் தயாரிக்கும் வேலைகளை நிதி ஆயோக் மேற்கொண்டு வருகிறது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா குறிப்பிடும்போது, ``முதற்கட்டமாக பங்குகளை விலக்கிக் கொள்வது மற்றும் உத்தி ரீதியான பங்கு விற்பனை செய்வது தொடர்பான முதற்கட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். அதில் பல நிறுவனங்களின் பெயர்களைக் பரிந்துரை செய்துள்ளோம். ஆனால் எவ்வளவு எண்ணிக்கை என்று சொல்வது கடினமானது என்று கூறினார். இரண்டாவது பட்டியலை தயாரிப்பதற்காக தொடர்ச்சியாக பணிகளை மேற்கொண்டு வருகிறோம்,’’ என்றும் குறிப்பிட்டார்.
பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வது மற்றும் விலக்கிக் கொள்வது தொடர்பான வழிகாட்டுதல்களை ஜூன் மாதத்தில் மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. குறிப்பாக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் நலிவடைந்த நிறுவனங்கள் என இரண்டு பட்டியலை தனித்தனியாக அளித்துள்ளது. இதில் பங்குகளை விலக்கிக் கொள்வது மற்றும் முழுவதுமாக மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் அடங்கும்.
நடப்பு நிதியாண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.56,500 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் என்ஹெச்பிசி-யின் 11.36 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ததன் மூலம் ரூ.2,700 கோடியை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.