ஏ.பி.பி. லாபம் 78% உயர்வு
மின்சார துறையில் ஈடுபட்டுவரும் நிறுவனமான ஏ.பி.பி.யின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 78% உயர்ந்து ரூ. 38.07 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 21.37 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே சமயம் நிறுவனத்தின் வருமானம் கடந்த வருட செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளது.
கடந்த வருட செப்டம்பர் காலாண்டின் வருமானம் ரூ.1,808.61 கோடியாகும்.
ஆனால் நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ. 1,785.90 கோடியாக இருந்தது. நடந்து முடிந்த காலாண்டில் இந்த நிறுவனத்துக்கு ரூ. 1,762 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்திருக்கிறது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த தொகை 5 சதவிகிதம் அதிகம்.
வர்த்தகத்தின் முடிவில் 2 சதவிகிதம் உயர்ந்து 644.70 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிவடைந்தது.
பி.ஹெச்.இ.எல். நிகர லாபம் சரிவு
மின்சார உற்பத்திக்கு தேவையான சாதனங்களை தயாரிக்கும் நிறுவனமான பி.ஹெச்.இ.எல். நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் கடுமையாக சரிந்திருக்கிறது. நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 456 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் கடந்த வருட (2012) செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் 1,274.45 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியது.
நிறுவனத்தின் வருமானமும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது சரிந்துள்ளது. கடந்த வருட ரூ 10,692 கோடி வருமானம் ஈட்டிய இந்த நிறுவனம், இப்போதைய வருமானம் ரூ. 9,482.25 கோடி மட்டுமே.
தொடர்ந்து ஐந்தாவது காலாண் டாக நிறுவனத்தின் நிகர லாபம் சரிந்து வருகிறது. தன்னுடைய துணை நிறுவனங்களை, இந்த காலாண்டில் இணைத்ததால், கடந்த வருடத்துடன் இப்போதைய முடிவுகளை ஒப்பிட முடியாது என்றாலும், எதிர்பார்த்தையை விடவும் நிகர லாபம் குறைந்தே உள்ளது. வர்த்தகத்தின் முடிவில் 1 சதவிகிதம் சரிந்து 140.35 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
வோல்டாஸ் நிகர லாபம் சரிவு
டாடா குழுமத்தை சேர்ந்த வோல்டாஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 1.51 சதவிகிதம் சரிந்திருக்கிறது.
கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் ரூ. 42.93 கோடி லாபம் ஈட்டியது. இப்போது ஒரு சதவிகிதம் சரிந்து ரூ 42.28 கோடியை லாபமாக பெற்றிருக்கிறது.
நிறுவனத்தின் வருமானமும் 7.20 சதவிகிதம் சரிந்திருக்கிறது.
கடந்த வருடம் ரூ. 1,160 கோடி வருமானம் ஈட்டிய வோல்டாஸ் நிறுவனம், இந்த காலாண்டில் ரூ 1,076 கோடி மட்டுமே வருமானம் பெற்றது.
அதே சமயத்தில், நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் செலவுகளும் 7.5 சதவிகிதம் அளவுக்கு குறைந்திருக்கிறது.
கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் 1,128.10 கோடி ரூபாய் அளவு இருந்த செலவுகள் இப்போது ரூ 1,043.1 கோடியாக இருக்கிறது.
வர்த்தகத்தின் முடிவில் ஒரு சதவிகித அளவுக்கு சரிந்து 91.80 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
ஜி.எஸ்.கே. நிகரலாபம் 14% உயர்வு
ஜி.எஸ்.கே. கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிகர லாபம் 14.29% உயர்ந்து ரூ. 146.93 கோடியாக இருக்கிறது. கடந்த வருட இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.128.55 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருமானமும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 17.44 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் ரூ 827.54 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருமானம் இப்போது ரூ. 971.94 கோடியாக இருக்கிறது.
விளம்பரத்துக்கு செய்யும் செலவுகளும் இந்த காலாண்டில் அதிகரித்திருக்கிறது.
கடந்த வருடம் 135.58 கோடி ரூபாயை விளம்பரத்துக்காக செலவு செய்தது.
இந்த வருடம் 20.40 சதவிகிதம் உயர்ந்து ரூ163.24 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் மொத்த செலவுகளும் 19.98% அதிகரித்திருக்கிறது
வர்த்தகத்தின் முடிவில் 2 சதவிகிதம் உயர்ந்து 4,764 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிவடைந்தது.