வணிகம்

வேளாண் வருவாய்க்கு வரி என்ற பேச்சுக்கே இடமில்லை: நிதியமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டம்

பிடிஐ

விவசாயிகளுக்கு அரசு உதவுமே தவிர ஒரு போதும் வரி விதிக்காது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். டோக்கியோவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கும் திட்டம் ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லவே இல்லை. விவசாயிகளில் பெரும் பணக்காரராக இருப்பவர்கள் மிக மிக அரிதாக உள்ளது.

விவசாயத்துக்கு தேவையான உதவிகளை அரசு செய்யுமே தவிர வரி விதிக்காது. மேலும் விவசாய

வருமானம் என்பது மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் எந்த ஒரு மாநிலமும் வரி விதிக்க முன்வராது என்று சுட்டிக் காட்டினார்.

விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கலாம் என்று நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார். மற்ற குடிமகன்களைப் போல விவசாயிகளும் தாங்கள் ஈட்டும் வருமானத்துக்கு வரி செலுத்து

வதில் எவ்வித தவறும் இல்லை என்றும் பருவ வேறுபாடுகளால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்வுத் தன்மையோடு கூடிய வரி விதிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது மிகப் பெரும் அதிர்வலையை கிளப்பியது.

பிபேக் தேப்ராயின் கருத்தை மறுத்ததோடு வரி விதிக்கும் யோசனை கிடையாது என முன்னரே குறிப்பிட்டிருந்தேன் என தெரிவித்த ஜேட்லி, தற்போது வேளாண் தொழில் மிகவும் மோசமான சூழலில் உள்ளது. விவசாய நிலங்கள்வைத்துள்ளவர்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவாக உள்ளது என்றும் கூறினார்.

மிக மோசமான சூழலில் உள்ள விவசாயத் துறைக்கு உதவ வேண்டுமே தவிர அதற்கு வரி விதிக்கக் கூடாது. அதற்குரிய நேரமும் இதுவல்ல. விவசாயிகளுக்கு அரசு உதவுமே தவிர, வரி விதிக்காது என்றும் கூறினார். இந்த விஷயத்தில் அரசு தெளிவாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

விவசாய வருமானத்துக்கு வரி விதிப்பது என்று பிபேக் தேப்ராய் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டார்.

வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினையை சமாளிக்க மத்திய அரசு கடந்த வாரம் கொண்டு வந்த அவசர சட்டம் குறித்து பேசிய ஜேட்லி, திவால் நடைமுறைகளைக் கடன் அளித்த வங்கிகள் கடனைத் திரும்ப செலுத்தாதவர்கள் மீது எடுப்பதற்கான உத்தரவை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும். இதற்கு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க குழுக்கள் அமைக்கப்படும் என்றுகுறிப்பிட்டார். வாராக் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண வழி வகைகள் காணப்பட்டுள்ளன. இப்போது அந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த அவசர சட்டம் வழி வகுக்கும் என்று ஜேட்லி கூறினார்.

விவசாயிகள் போர்வையில் வரி ஏய்ப்பு

விவசாய வருமானத்துக்கு வரி விதிப்பு என்ற விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து முன்னணி தணிக்கையாளர் ஒருவர் கூறியதாவது:

விவசாய வருமானத்துக்கு வரி விதிக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் விதிமுறைகள் கிடையாது. ஒருவேளை வரி விதிக்கலாம் என்று அரசு விரும்பினால் அரசியல் சாசன திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இதை நன்கு அறிந்து கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்கின்றன. அதேபோல பெரும் நிலச் சுவான்தார்கள், பிற இனங்களில் ஈட்டும் வருமானத்தை மறைத்து விவசாயத்தில் நஷ்டம் என கணக்கு காண்பிக்கவும் பயன்படுத்துகின்றனர்.விவசாயிகளுக்கு அளிக்கும் கடன் தள்ளுபடி, வட்டி ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளால் பயன் பெறுவது ஏழை விவசாயிகளை விட பெரும் பணக்காரர்கள்தான் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம் மாத ஊதியம் தவிர, விவசாயம் மூலம் சொந்த கிராமத்திலிருந்து வரும் சொற்ப வருமானத்தை, கூடுதல் வருமானமாக காண்பித்து, அதற்கு வரி செலுத்துவோரும் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT